விஜயகாந்துடன் திருநாவுக்கரசர் ‘திடீர்’ சந்திப்பு !

247 0

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை நேற்று திடீரென்று சந்தித்து பேசிய திருநாவுக்கரசர், தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க. இடம் பெறுவது உறுதியாகி இருக்கிறது. இந்தக் கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. பா.ம.க.வுக்கு கூடுதலாக ஒரு மாநிலங்களவை தொகுதியும் வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், தே.மு.தி.க. வையும் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெறச் செய்வது குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்றது. தமிழக பா.ஜ.க. பொறுப்பாளரும், மத்திய மந்திரியுமான பியூஸ் கோயல் நேரடியாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்து கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார்.

ஆனால், தே.மு.தி.க.வோ பா.ம.க.வை விட தங்களுக்கு கூடுதல் இடங்களை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்து வந்தது. பா.ம.க.வுக்கு வட மாவட்டங்களில் மட்டும் தான் வாக்கு வங்கி இருப்பதாகவும், தங்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக வாக்கு வங்கி உள்ளதாகவும் தே.மு.தி.க. கூறியது. அதுமட்டுமல்லாமல், பா.ம.க.வுக்கு செல்வாக்கு உள்ள இடங்களில் தங்களுக்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்தது.
இதனால், அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுவதில் தொடர்ந்து இழுபறி நிலை நீடித்து வருகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் பா.ஜ.க., பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டது போக மீதம் 27 தொகுதிகளே உள்ளன. மேலும், கூட்டணியில் உள்ள புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் உள்ளிட்ட சில கட்சிகளும் ‘சீட்’ கேட்பதால், தே.மு.தி.க.வுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க முடியாத நிலை இருந்து வருகிறது. ஆனால், தே.மு.தி.க.வோ 9 தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் என்று முரண்டு பிடிக்கிறது.


எனவே, அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறுமா?, இடம்பெறாதா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், நேற்று காலை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான பிரேமலதா, எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, இளங்கோவன், மோகன்ராஜ் ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தினர்.


சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சியில் மாநில தேர்தல் குழு உறுப்பினராக உள்ள முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் விஜயகாந்தை சந்திக்க வருவதாக தகவல் பரவியது.


இதனால், விஜயகாந்த் வீடு முன்பு குவிந்திருந்த பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி நிருபர்கள் பரபரப்படைந்தனர். தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணையுமா? என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்தது.


இந்த நிலையில், பகல் 11.55 மணிக்கு விஜயகாந்த் இல்லத்துக்கு திருநாவுக்கரசர் வந்தார். அவரை தே.மு.தி.க. மூத்த நிர்வாகி பார்த்தசாரதி வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். முதலில் விஜயகாந்திடம் உடல் நலம் விசாரித்த திருநாவுக்கரசர், பின்னர் அங்கிருந்த பிரேமலதா, எல்.கே.சுதீஷ் ஆகியோருடன் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேசினார்.


தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியில் தே.மு.தி.க.வும் இணையும் பட்சத்தில், போதிய தொகுதிகள் பெற்றுத்தருவதாகவும் திருநாவுக்கரசர் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த திருநாவுக்கரசர் அங்கு கூடியிருந்த நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.


அப்போது அவர் கூறியதாவது:-
விஜயகாந்த் எனக்கு 35 ஆண்டுகால நண்பர். அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று, உடல்நலம் தேறி சென்னை வந்த சமயம், நானும் வெளிநாட்டில் இருந்தேன். பிறகு டெல்லி சென்ற நான் நேற்று தான் திரும்பி வந்தேன். இதனால், இடையில் அவரை சந்தித்து உடல்நலம் விசாரிக்க முடியவில்லை. எனவே விஜயகாந்திடம் உடல்நலம் குறித்து விசாரிக்க வந்தேன். அவரை நேரில் சந்தித்தேன். அவரது மனைவி, மைத்துனர் உள்பட குடும்பத்தினருடன் கலந்து பேசினேன்.

விஜயகாந்த் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. நல்ல உடல்நிலையில் அவரை பார்ப்பது எனக்கு சந்தோஷம். அவர் விரைவில் பூரண குணமடைந்து வரவேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.
விஜயகாந்த் ஒரு அரசியல் கட்சியின் தலைவர். நானும் ஒரு அரசியல்வாதி. 2 பேர் சந்திக்கும்போது, நாட்டு நடப்பு மற்றும் அரசியல் பற்றி பேசவில்லை என்று சொன்னால் அது பொய்யாகி விடாதா? அதுவும் தேர்தல் நெருங்கும் வேளையில் இது சாத்தியமா?.
எனவே அரசியல் பேசினோம். நாட்டு நடப்பு எப்படி? என்று அவருக்கு நன்றாகவே தெரியும். எனவே நாட்டு நடப்பை மனதில் கொண்டு ஒரு நல்ல முடிவை எடுக்கவேண்டும் என்று அவரிடம் எனது அபிப்ராயத்தை தெரிவித்திருக்கிறேன். அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.
தே.மு.தி.க.வுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்கியிருப்பதால், அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி அதிருப்தி அடைந்துள்ளது.