
காஷ்மீரின் புல்வாமா தாக்குதலின் விளைவாக தற்போது 18 பிரிவினைவாதிகள் மற்றும் 155 அரசியல்வாதிகளுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில், 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களான மிர்வாயிஸ் உமர் பாரூக், யாசின் மாலிக் உள்ளிட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை ரத்து செய்ய உள்ளதாக அம்மாநில அரசு கடந்த பிப்ரவரி 17 அன்று அறிவித்திருந்தது. இதன்படி 6 பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு உடனடியாக ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று ஜம்மு காஷ்மீரின் தலைமைச் செயலாளர் சுப்பிரமணியம் தலைமையில் பாதுகாப்பு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது மேலும் பல தலைவர்களின் பாதுகாப்பை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, பிடிபி தலைவர் வாகித் பர்ரா, ஐஏஎஸ் அதிகாரி ஷா ஃபாசில், எஸ்ஏஎஸ் கிலானி, அகா சையது மொஸ்வி, மவுலவி அப்பாஸ் அன்சாரி, யாசின் மாலிக், சலீம் கிலானி, ஷாகித் உல் இஸ்லாம், சாபர் அக்பர் பட், ஃபரூக் அகமது கிச்லூ, மஸ்ரூர் அப்பாஸ் அன்சாரி, அகா சையது அபுல் ஹுசைன், அப்துல் கனி ஷா, முகமது முசாதுஇக் பட் உட்பட 155 அரசியல்வாதிகள், 18 பிரிவினைவாத தலைவர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. #P

