ஜெனீவாவில் மேற்குலக நாடுகளின் தேவைக்கேற்பவே காய் நகர்த்தப்படுகின்றன-அருட்தந்தை சக்திவேல்

231 0

ஜெனீவா கூட்டத்தொடரிலும் மேற்குலக நாடுகளின் தேவைக்கேற்பவே காய்கள் நகர்த்தப்படுவதாக சுடடிக்காட்டிய அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல், ஜெனீவாவில் நடைபெறுகின்ற மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரிற்கு இலங்கையிலிருந்து பிரதிநிதிகள் செல்வது ஓர் சுற்றுலாப்பயணம் போன்றே உள்ளது எனவும் குறிப்பிட்டார். 

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 

பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் இங்கிருந்து ஜெனீவா செல்பவர்களுக்கு இடையில் இடைத்தொடர்போ, புரிதலோ இல்லை. ஜெனீவாவில் தாம் எவ்விடயம் தொடர்பில் பேசப்போகின்றோம், எத்தகைய அழுத்தத்தை வழங்கப் போகின்றோம் என்ற திட்டமிடல் இல்லை. இலங்கையிலிருந்து ஜெனீவா செல்பவர்கள் ஓர் தனிநபரின் பிரச்சினைக்காகச் செல்லவில்லை. மாறாக ஒரு இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அநீதிக்கு தீர்வு பெறும் நோக்கிலேயே செல்கின்றார்கள் என்ற தெளிவிருக்க வேண்டும்.

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் போதியளவு அழுத்தத்தினை வழங்கவில்லை என்பதே உண்மையாகும். 

காரணம் தற்போதைய அரசாங்கத்தை பாதுகாப்பதொன்றே மேற்குலக நாடுகளின் தேவைப்பாடாக உள்ளது. எனவே இந்த அரசாங்கத்திற்கு பாரிய அழுத்தங்களை வழங்குவதற்கு அவர்கள் முன்வர மாட்டார்கள். ஜெனீவா கூட்டத்தொடரிலும் மேற்குலக நாடுகளின் தேவைக்கேற்பவே காய்கள் நகர்த்தப்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.