இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் – உயர் கல்வி அமைச்சர் ஹக்கீம் சந்திப்பு

192 0

இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர்  முன்னாள் மேஜர் ஜெனரல் கலாநிதி. ஷாஹித் அஹமத் ஹஷ்மத் நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீமை நேற்று உயர் கல்வி அமைச்சகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

பரஸ்பர ஈடுபாடு மற்றும் ஒத்துழைப்பு போன்ற துறைகளிலான இருதரப்பு உறவுகள் மற்றும்  தக்ஷில்லா கந்தாரா நாகரீக கற்கை நிலையத்தினை இலங்கையில் நிறுவுவது தொடர்பான வாய்ப்புக்கள் குறித்தும்  இச்சந்திப்பின் பொழுது கலந்துரையாடப்பட்டன.

பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கிடையிலான உயர் கல்வி ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளில்  இலங்கை மாணவர்களுக்கு வழங்கப்படவிருக்கின்ற புலமைப்பரிசீல்கள் தொடர்பாக பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகரால் அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

உயர் ஸ்தானிகர் பணியகம் இலங்கையின் பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்துடன் இணைந்து  பாகிஸ்தானின் கந்தாரா பாரம்பரியம் மற்றும் இருநாடுகளுக்கிடையிலான கலாசார தொடர்புகள் குறித்த சர்வதேச கருத்தரங்கினை இலங்கையில் மார்ச் மாதமளவில் ஏற்பாடு செய்துள்ளது என உயர் ஸ்தானிகர் இதன்பொழுது அமைச்சரிடம் தெரிவித்தார்.

இலங்கை இளைஞர்களின் திறன்களை அபிவிருத்தி செய்வதன் நிமித்தம் பாகிஸ்தானிய அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற வாய்ப்புகள் மற்றும் பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் முயற்சிகளிற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன்போது தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.