விஜயகாந்துடன் பியூஸ் கோயல் சந்திப்புஅ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க இணையுமா?

201 0

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை, மத்திய மந்திரி பியூஸ் கோயல் நேற்று சந்தித்து அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வருமாறு பேச்சுவார்த்தை நடத்தினார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று சமீபத்தில் சென்னை திரும்பினார். தற்போது அவர் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்தநிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைய இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதற்கிடையில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், மத்திய மந்திரி பியூஸ் கோயல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்துக்கு நேற்று மாலை 6 மணிக்கு வந்தார். பா.ஜ.க. நிர்வாகிகள் முரளிதரராவ், பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், சி.பி. ராதாகிருஷ்ணன், இரா.பிரகாஷ் ஆகியோரும் உடன் சென்றனர்.

அங்கு விஜயகாந்தை சந்தித்து, பியூஸ் கோயல் உடல் நலம் விசாரித்தார். விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, மைத்துனர் எல்.கே.சுதீஷ் ஆகியோரிடமும் நலம் விசாரித்தார். அதனைத்தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு விஜயகாந்துக்கு பியூஸ் கோயல் அழைப்பு விடுத்ததாகவும், ஆனால் கூடுதல் தொகுதிகள் கேட்டு விஜயகாந்த் வலியுறுத்தியதாகவும், இதையடுத்து அவரை சமரசம் செய்யும் முயற்சிகள் நடந்ததாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியானது.
மேலும் பிரேமலதா, சுதீசுடன் சிறிது நேரம் பியூஸ் கோயல் பேசியதாகவும் கூறப்படுகிறது.
விஜயகாந்தை சந்தித்து நலம் விசாரித்த பின்னர், பியூஸ் கோயல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசியல் மட்டுமின்றி திரையுலகிலும் முக்கிய அங்கம் வகித்தவர் எனது நண்பர் விஜயகாந்த். அவர் உடல்நலக்குறைவு காரணமாக வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரை சந்தித்து நலம் விசாரித்தேன். அவர் வேகமாக உடல்நலம் தேறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் நல்ல ஆயுளோடும், ஆரோக்கியத்துடனும் இருக்கவேண்டும் என்று நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் சார்பில் வாழ்த்து தெரிவிக்க வந்தேன். எல்லாவற்றையும் அரசியலாக பார்க்கக் கூடாது. மனிதாபிமானம் மற்றும் அக்கறை உணர்வுடன் மட்டுமே விஜயகாந்தை சந்தித்து உடல்நலம் விசாரித்தேன். வேறு ஒன்றும் கிடையாது.

மத்திய மந்திரி பியூஸ் கோயல், கூட்டணி விவகாரம் தொடர்பாகவே விஜயகாந்தை சந்திக்க வந்தார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உடல்நலம் விசாரிக்க வந்ததாக மழுப்பலாக பதில் அளித்து அவர் சென்றிருக்கிறார்.
விஜயகாந்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் இழுபறி ஏன் என்பதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதாவது அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. எனவே பா.ம.க.வுக்கு இணையாக தங்களுக்கும் 7 தொகுதிகள் கேட்டு தே.மு.தி.க. வலியுறுத்தியதாகவும், அதனாலேயே இந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணையுமா? என்ற கேள்விக்குறி எழுந்து உள்ளது. அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் தே.மு.தி.க.வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது.