தேசிய விளையாட்டு விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதியை நோக்கி திடிரென பொது மகன் ஒருவர் ஓடிச் சென்றதால் அங்கு பதற்றம் ஏற்பட்டிருந்தது.
யாழ்.துரையப்பா விளையாட்டு அரங்கில் 42 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன கலந்து கொண்டிருந்தார். இந் நிகழ்வினை பார்வையிடுவதற்கு பொது மக்களும் வருகைதந்திருந்தனர்.
இந்நிலையில் நிகழ்வு முடிந்து பின்னர் வெற்றியிட்டிய விளையாட்டு வீரர்களுடன் ஜனாதிபதி குழு புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக மைதானத்திற்கு சென்றிருந்தார்.
இதன் போது பார்வையாளர் அரங்கில் இருந்த ஒருவர் திடிரேன கைகளை தூக்கிக் கொண்டு ஜனாதிபதியை நோக்கி ஓடிச் சென்றார். இருந்த போதும் ஜனாதிபதியின் பாதுகாவலர்கள் அவரை தடுத்து நிறுத்திவிட்டனர்.
பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட அவர் ஜனாதிபதியை பார்த்து உங்களுடைய பொலிஸ் எங்களை அடித்து சித்தரவதை செய்கின்றது. எங்களை காப்பாற்றுங்கள் என்று சத்தமிட்டார். இருப்பினும் ஜனாதிபதி அதனை பொருட்படுத்தாமல் அங்கிருந்து சென்விட்டார்.
இதன் பின்னர் குறித்த நபரிடம் விநாவிய போது லண்டனில் இருந்து தான் வந்துள்ளதாகவும், தன்னிடம் பணத்தினை பறித்துக் கொள்ள பொலிஸார் முற்பட்ட போது அதற்கு தான் இணங்கிக் கொள்ளாத நிலையில், தன் மீது பொய் வழக்கு ஒன்றினை பதிவு செய்து, தன்னையும் கைது செய்து சாப்பாடு, தண்ணீர் கூட தராமல் ஒரு நாள் முழுவதும் வைத்து அடித்து பொலிஸார் சித்தரவதை செய்ததாக கூறினார்.
இவ்விடயம் தொடர்பாக மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் யூட்சனிக் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள போதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனாலேயே நான் ஜனாதிபதியிடம் சென்று முறையிடுவோம் என்று எண்ணி அவரை சந்திக்க இன்று வந்தேன், அதனை தவிர வேறு எந்த நோக்கமும் என்னிடத்தில் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.



