பண மோசடி செய்த. மத போதகருக்கு விளக்கமறியல்

219 0

கனடா நாட்டுக்கு அனுப்பிவைப்பதாக தெரிவித்து 35 இலட்சம் ரூபா பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றினார் – நம்பிக்கை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிருஸ்தவ மத போதகரை விளக்கமறியில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம் கோயில் வீதியில் அமைந்துள்ள கிருஸ்தவ ஆலயத்தில் போதகராக கடமையாற்றுபவர், குருநகரைச் சேர்ந்த நபர் ஒருவரை கனடாவுக்கு அனுப்பிவைப்பதாகக் கூறியுள்ளார்.

கனடாவுக்கு அனுப்பிவைப்பதற்கு அந்த நபரிடம் 45 இலட்சம் ரூபா பணம் வேண்டும் என்றும் போதகர் தெரிவித்துள்ளார். அதன்படி முதல்கட்டமாக 35 இலட்சம் ரூபாவை வழங்குமாறு போதகர் கேட்டுள்ளார். முதல் கட்ட தொகையை போதகரின் வங்கியில் சம்பந்தப்பட்ட நபரால் வைப்பிலிடப்பட்டுள்ளது.

வங்கியில் பணம் வைப்புச் செய்து ஒரு வருட காலமாகியும் கனடாவுக்கு அனுப்பிவைப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் போதகர் செய்யவில்லை. அதனால் பணத்தை வைப்பிலிட்ட நபர், வங்கியில் வைப்புச் செய்த சிட்டையை ஆதாரமாகக் கொண்டு யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவில் முறைப்பாட்டை வழங்கினார்.

முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத் தடுப்புப் பொலிஸார், சந்தேகநபரை கைது செய்தனர். அவரை நேற்று யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தினர்.

“சந்தேகநபரான போதகர் 35 இலட்சம் ரூபா நிதியை மோசடி செய்துள்ளார். அவருக்கு யாழ்ப்பாணத்தில் நிரந்தர வதிவிட முகவரி இல்லை. கிருஸ்தவ ஆலயத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட அவர், அதன் முகவரியையே வழங்கியுள்ளார்

அத்துடன், சந்தேகநபருக்கு எதிராக பல முறைப்பாடுகள் உள்ளன. மேலும் சில முறைப்பாடுகள் அவருக்கு எதிராக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்குத் தொடர்பிலும் விசாரணைகள் நிறைவடையாத நிலையில் அவரை பிணையில் விடுக்கவேண்டாம்” என்று சிறப்புக் குற்றத்தடுப்பு பொலிஸார் மன்றில் சமர்ப்பணம் செய்தனர்.

சந்தேகநபர் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி தவபாலன் பிணை விண்ணப்பத்தை முன்வைத்து நீண்ட சமர்ப்பணத்தை செய்தார்.

“சந்தேகநபர் பலாங்கொடையில் பிறந்தவர். போதகர் பணிக்காக யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ளார். பிறந்த இடத்தில் நிரந்தர முகவரி இருக்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது.

நான் ஏழாலையில் பிறந்தேன். நல்லூரில் வசிக்கின்றேன்” என்று சமர்ப்பணம் செய்தார்.

இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிவான் ஏ.எஸ்.பி.போல், கட்டளையை வழங்கினார்.

“இரண்டு தரப்பினரின் சமர்ப்பணத்தையும் மன்று சீர்தூக்கி ஆராய்ந்த்து. சந்தேகநபருக்கு எதிராக பல முறைப்பாடுகள் உள்ளன. இந்த வழக்கிலும் 35 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணைகளையும் பொலிஸார் நிறைவு செய்யவில்லை.

அதனால் பிணை மறுப்புச் சட்டத்தின் 14 (1)(பி) அடிப்படையில் சந்தேகநபர் சார்பான பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்படுகின்றது. சந்தேகநபரை எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிடுகின்றது” என்று நீதிவான் ஏ.எஸ்.பி.போல் கட்டளை வழங்கினார்.

Leave a comment