அம்பாறையில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பம்

337 0

அம்பாறை மாவட்டத்தின் பெரும்போக நெல் அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் தெரிவித்தார்.

இம்முறை பெரும்போக நெற்செய்கை சுமார் 86,816 ஹெக்டெயர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டது. இவற்றின் அறுவடை அம்பாறை மாவட்டத்தில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பெரும்போகத்தில் செய்கை பண்ணப்பட்ட நெற்செய்கை சிறந்த விளைச்சலைத் தந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ஒரு ஏக்கர் காணியிலிருந்து செய்கை பண்ணப்பட்ட நெற்செய்கை மூலம் சுமார் 40 முதல் 50 மூட்டைகள் வரை விளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்ட உரமானிய விநியோகம் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டதால் குறிப்பிடத்தக்க விளைச்சல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் இம்முறை கபிலநிறத்தத்திகளின் தாக்கம் ஏற்பட்டதனால் குறிப்பிட்ட சிறு தொகை நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தனியார் துறையினர் நெல் கொள்வனவில் ஈடுபட்டு வருவதால், நெல்லுக்கான விலையில் தளம்பல் நிலை காணப்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் அம்பாறை மாவட்ட விவசாயிகளிடமிருந்து அரச உத்தரவாத விலைக்கு பெரும்போக நெல் கொள்வனவு செய்யப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a comment