வடக்கு முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன், எழுக தமிழ் நிகழ்வில் வெளியிட்ட கருத்துக்களை கொண்டு இனவாத கருத்துக்களை வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை இந்து கோங்கிரஸ் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
இந்து கோங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், கடந்த 24ஆம் திகதி விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்களை வைத்துக்கொண்டு சில சமய பெரியார்கள் மற்றும் அரசியல்வாதிகள் இனவாதக்கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இது கண்டிக்கத்தக்க செயலாகும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமது உரைகளில் நல்லாட்சி அரசாங்கத்தை தெரிவுசெய்ய உதவிய தமிழர்களுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்துவருகின்ற நிலையில் சில அரசியல்வாதிகள் இனவாதக்கருத்துக்களை வெளியிடுகின்றனர்.
இது நிறுத்தப்படவேண்டும்.
எனினும் உள்துறை அமைச்சர் வஜிர அபேவர்த்தன, விக்னேஸ்வரனின் உரையில் அடங்கியுள்ள உண்மையான கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தநிலையில் தமிழர்களை இந்தியாவுக்கு அனுப்பவேண்டும் என்று பௌத்த அமைப்பு ஒன்றுக்கூறியிருப்பது வருத்தமளிக்கிறது என்று இந்துக் கோங்கிரஸ் தெரிவித்துள்ளது.
அத்துடன் விக்னேஸ்வரனின் கருத்துக்களில் இனவாதம் அடங்கியிருக்கவில்லை என்றும் கோங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

