தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நாடாளுமன்ற தேர்தலுக்கு புதிய வியூகம்

245 0

தி.மு.க.வில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த அமைக்கப்பட்ட குழுவுடன் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.

தி.மு.க.வில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த அமைக்கப்பட்ட குழுவுடன் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

துரைமுருகன் தலைமையில் குழு


நாடாளுமன்ற தேர்தலை விரைவில் நாடு சந்திக்க இருக்கின்ற நிலையில், தமிழகத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், எதிர்கட்சியான தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் உருவாகி வருகிறது. அ.தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரை பா.ஜ.க. இடம்பெறுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில், பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளையும் கூட்டணிக்கு இழுப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.


மற்றொரு புறம் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெறும் என்று தெரிகிறது. இந்த நிலையில், கடந்த 20-ந்தேதி கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தி.மு.க.வில் கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.


முதல் கூட்டம்


அந்த குழுவில், துணைப் பொதுச்செயலாளர் இ.பெரியசாமி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவின் முதல் கூட்டம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் வழங்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதாவது, தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் யாருக்கெல்லாம் தொகுதி வழங்குவது? என்பது குறித்து முதலில் விவாதிக்கப்பட்டுள்ளது.
புதிய வியூகம்
அவ்வாறு தொகுதிகள் வழங்க வேண்டிய கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை வழங்குவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்புகள் உள்ள தொகுதிகள் குறித்தும் பேசப்பட்டது. தமிழகம் – புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் உத்வேகத்துடன் தி.மு.க. புதிய வியூகம் அமைத்து வருகிறது.
ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வில் இன்னும் கூட்டணியே வெளிப்படையாக அறிவிக்கப்படாத நிலையில், தி.மு.க. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை விரைவில் கூட்டணி கட்சிகளுடன் தொடங்க இருக்கிறது. அதற்கு முன்னோட்டமாகத் தான் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது. விரைவில் இந்த குழு மீண்டும் கூடி விவாதிக்கும் என்றும் தெரிகிறது.


Leave a comment