நிலத்தில் அழிந்து போகும் வகையில் பிளாஸ்டிக்கை மாற்ற வேண்டும் வெங்கையாநாயுடு பேச்சு

228 0

நிலத்தில் அழிந்து போகும் வகையில் பிளாஸ்டிக்கை மாற்ற வேண்டும் என்று வெங்கையாநாயுடு கூறினார்.

சென்னையில் உள்ள ‘சிப்பெட்’ நிறுவனத்தின் பொன் விழா நடந்தது. இந்த விழாவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு தலைமை தாங்கினார். கவர்னர் பன்வாரிலால் புரோகித், மத்தியமந்திரி சதானந்த கவுடா, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு பேசுகையில் கூறியதாவது:-
பிளாஸ்டிக் வளர்ச்சி குறித்த மிகவும் சிக்கலான, முக்கியமான ஒரு கேள்வி எழுந்துள்ளது. ஒரு புறத்தில் நல்ல பொருட்களைப் பயன்படுத்தி வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நிலவுகிறது. மறுபுறத்திலோ, பிளாஸ்டிக் பொருட்களை தங்குதடையின்றி பயன்படுத்துவதன் விளைவாக நமது வாழ்க்கை நீடித்திருப்பதற்கான ஆதார வளங்களை மிக மோசமாக அரித்துவிடும் அபாயமும் நிலவுகிறது.
பிளாஸ்டிக் பயன்பாடு என்பது மருத்துவ சேவைக்கான தொழிலை தலைகீழாக மாற்றியமைத்துள்ளது. ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக்கினால் ஆன மருந்து செலுத்தும் ஊசிகள், ரத்தத்தை சேமித்து வைக்கும் பைகள், இதயத்திற்கான புதிய வால்வுகள் மற்றும் இதர மருத்துவ பொருட்கள் ஆகியவை பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கான ஒரு சில சிறந்த உதாரணங்கள். வலியற்ற செயல்பாடு பிரச்சினை உருவாக்காத மூட்டுகள் ஆகியவற்றை மக்களுக்கு வழங்கும் இன்றைய செயற்கை மூட்டுகள், இடுப்பு எலும்புகள் ஆகியவை பிளாஸ்டிக்கையே நம்பியுள்ளன.
பிளாஸ்டிக் பல்வேறு வழிகளில் நமது சமூகத்திற்குப் பயன் தந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் விண்கலங்கள், வான் பயண ஊர்திகள், விமானங்கள், ஏவுகணைகள் போன்றவற்றின் முன்னேற்றங்கள் உள்ளிட்டு வானியல் தொழில்நுட்பத்திற்கு பிளாஸ்டிக் உதவியுள்ளது.
பிளாஸ்டிக்கின் சாதகமான அம்சங்கள் பல இருந்தபோதிலும் நமது சுற்றுச்சூழலுக்கு அவை பல்வேறு சவால்களையும் ஏற்படுத்துகின்றன. ஒரு முறை மட்டுமே பயன்படுத்துவதற்காக தயாரிக்கப்படும் பயன்பாட்டுப் பொருட்கள் தொடர்ந்து குப்பைத் தொட்டிகளை நிரப்புகின்றன, நிலங்களில் தூக்கியெறியப்படுகின்றன.
இதன் விளைவாக நமது நிலத்தடி நீர் மற்றும் நீராதார உயிர்களுக்கு அபாயம் ஏற்படுகிறது. பொறுப்பான முறையில் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதையும், முறையாக அவற்றை மறுசுழற்சி செய்வதையும் உறுதிப்படுத்த வேண்டும். நிலத்தில் அழிந்து போகும் தன்மையுடன் பிளாஸ்டிக் வகையாக தற்போதைய வழக்கமான பிளாஸ்டிக்கை மாற்ற வேண்டியது முக்கியமானதாகும்.
இத்தருணத்தில் பிளாஸ்டிக்பொருட்களை மறுசுழற்சி செய்வது, வேறு நோக்கங்களுக்குப் பயன்படுத்துவது, மீண்டும் பயன்படுத்துவது ஆகியவை குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதில் தேவையான முன்முயற்சிகளை எடுக்க வேண்டுமென சிப்பெட் நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கவும் விழைகிறேன். அதன் முயற்சிகள் அனைத்திலும் நீடித்து நிற்கும் தன்மை என்பதையே தனது வழிகாட்டும் குறிக்கோளாக சிப்பெட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிளாஸ்டிக்கின் பயன்களைப் பெறும் அதே நேரத்தில் அவை இறுதியில் நமது பெருங்கடல்களில் சென்று சேராமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டிய அவசியமும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment