சுகபோகங்களுக்காக கூட்டமைப்பு எங்களை விற்றுவிட்டது!

4407 0

தமிழ்தேசியத்தை, உயிா்த்தியாகங்களையும் விற்று, இழிவுபடுத்தி சிங்கள போினவாத சக்திகளிடம் தமிழா்களை பேரம்பேசி விற்றதன் ஊடாக தங்கள் சுகபோக வாழ்வை முன்னெடுத்து செல்லும் தமிழ்தேசிய கூட்ட மைப்பு அந்த நிலையிலிருந்து மாறவேண்டும். என முன்னாள் அரசியல் கைதி வீரசிங்கம் சுலக்ஸன் கூறியுள்ளாா்.

அரசியல் கைதியாக நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டு, விடுவிக்கப்பட்ட வீரசிங்கம் சுலக்சன்,   இன்று யாழில், அரசியல் கைதிகளுக்கு கூட்டமைப்பினரின் பதில் என்ன? என்ற தலைப்பில் அறிக்கையை வெளியிட்டு, செய்தியாளர் மத்தியில் பேசும்போதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடும்போது-

“தமக்குத் தாமே விழா எடுத்து தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்ளும் தமிழக அரசியல் போன்ற ஈனத்தனமான அரசியல் செய்வதனை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கைவிட்டு தமக்காக தங்கள் வாழ்வையே அர்ப்பணித்து சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் கொஞ்சம் கரிசனை கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம். சிறையில் சொல்ல முடியா வலிகளை அனுபவிக்கும் அரசியல் கைதிகள் போன்றோரால் செய்யப்பட்ட இதயம் கனக்கும் தியாகங்களில் தான் உங்கள் பதவி என்னும் நாற்காலி அமைந்துள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தமிழ் தேசியத்தையும் பல உயிர் தியாகங்களையும் இழிவுபடுத்தி சிங்கள பேரினவாத சக்திகளிடம் தமிழர்களைப் பேரம் பேசி விட்டு தங்களின் சுகபோக வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதை கூட்டமைப்பினர் கைவிட வேண்டும் .

சுமந்திரனின் எஜமான் எனக் கருதப்படும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஏற்பட்ட பதவி நெருக்கடிக்கும், அண்மையில் கஞ்சா போதைப் பொருளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் பொலிசாரால் கைது செய்யப்பட்டவர்களுக்காகவும் துடித்த சுமந்திரனின் சட்ட புலமை, அதிகார வல்லமை அரசியல் கைதிகள் விடயத்திலும் காணப்படுமா? இன்றுடன் நல்லாட்சி என கூட்டமைப்பினால் கூறப்பட்ட ஆட்சி நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையில் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொடுத்த கூட்டமைப்பினர் பேசிய பேரம் பெட்டி நிறைய பணமா?

தமிழீழ விடுதலைப் புலிகளின் தவறுகள் என இனங்காண முற்படும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எத்தனை பேரிடம் அரசியல் கைதிகள் காணாமல் ஆக்கப்பட்டோர் யுத்தத்தில் கொல்லப்பட்ட டோர் கணவன் அல்லது மனைவி இழந்து அநாதரவான பிள்ளைகள் தொடர்பான தகவல் கோவை உண்டு? நீங்கள் கூறிய நல்லாட்சி முடியும் முன்னரே எமக்கான தீர்வுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பினரே பெற்றுத்தர வேண்டும்.

அதில் முக்கியமானவை- அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோரிற்கான பதில், வடக்கு கிழக்கு இணைப்பு, மாகாணங்களுக்கு காணி பொலிஸ் அதிகாரம். இவற்றைச் செயல்படுத்த முடியாத சந்தர்ப்பத்தில் சிங்கள பேரினவாதிகளிடம் இருந்து தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுக்கொள்ள முடியாது என சர்வதேச ஊடகங்களை அழைத்தும் ஐநா சபைக்குச் சென்றும் பகிரங்கமாக சர்வதேச சமூகத்திற்கு கூறுவதற்கு கூட்டமைப்பின் ஒட்டுமொத்த பாராளுமன்ற உறுப்பினர்களும் தயாரா?

அல்லது இன்னுமொரு நல்லாட்சி வரும் என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்ற போகிறீர்களா” – என்றார்.

Leave a comment