ஆப்கானிஸ்தான் சிறப்புப் படையினர் அலுவலகம் மீதான தாக்குதலில் பலி 65 ஆக உயர்ந்தது!

233 0

ஆப்கானிஸ்தான் நாட்டின் மைடான் வர்தாக் மாகாணத்தில் சிறப்புப் படையினர் அலுவலகம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் மைடான் வர்தாக் மாகாணத்தில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டு வரும் ராணுவம் மற்றும் போலீசாரை கொண்ட சிறப்புப்படை அலுவலகம் இயங்கி வருகிறது.

மைடான் ஷார் நகரில் உள்ள இந்த அலுவலகத்தின் வாசலில் நேற்று காலை (உள்ளூர் நேரப்படி) சுமார் 9 மணியளவில் குண்டுகள் நிரப்பப்பட்ட காரை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்திய தலிபான் பயங்கரவாதிகள், துப்பாக்கிகளால் சுட்டவாறு சிறப்பு படை அலுவலகத்துக்குள் ஊடுருவ முயன்றனர். 

அவர்களுக்கும் சிறப்புப்படை காவலர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இருதரப்பிலும் 18 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த சுமார் 50 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சிகிச்சை பெற்றுவந்த சிலர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் இன்றைய நிலவரப்படி இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை 65 ஆக உயர்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

Leave a comment