சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2½ லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்படும் நெல்லையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

287 0

சென்னையில் 23, 24-ந் தேதிகளில் நடத்தப்படும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2½ லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

நெல்லை டவுனில் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

எம்.ஜி.ஆர். மக்களுக்காக வாழ்ந்த தலைவர். ஜெயலலிதா 6 முறை முதல்-அமைச்சராக இருந்திருக்கிறார். அவரது ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள் ஏராளம். தி.மு.க. ஆட்சியில் என்ன திட்டம் போட்டார்கள்?. அவர்கள் போட்ட திட்டம் எந்த மக்களை போய் சேர்ந்தது?. எதுவுமே இல்லை.

50 ஆண்டு காலம் தீராத காவிரி பிரச்சினையை சுப்ரீம் கோர்ட்டு மூலம் தீர்த்த அரசு அ.தி.முக. அரசு. டெல்டா பாசன விவசாயிகளின் உரிமையை பெற்றுத்தந்த அரசு அ.தி.மு.க. அரசு. தி.மு.க. ஆட்சியில் செய்தார்களா?. எதுவும் செய்யவில்லை.

2006 முதல் 2011-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சி இருந்தது. அப்போது கடுமையான மின்வெட்டு இருந்தது. எப்படி சிரமப்பட்டோம் என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது உபரி மின்சாரம் இருக்கிறது. நிர்வாகத் திறமையுடன் அரசு விளங்கிக்கொண்டிருக்கும் காரணத்தினாலே இன்றைக்கு உபரி மின்சாரம் கிடைக்கிறது.

இன்றைக்கு தொழிற்சாலைகளுக்கு தேவையான மின்சாரத்தை கொடுப்பதால் தான் புதிய புதிய தொழிற்சாலைகள் வந்து கொண்டிருக்கின்றன.

எதிர்க்கட்சியினர் எந்த தொழிலை கொண்டு வந்தீர்கள் என்று கேட்கிறார்களே. வருகின்ற 23, 24-ந் தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது. அதில் ரூ.2½ லட்சம் கோடி முதலீடு செய்ய இருக்கிறார்கள். அவ்வளவு முதலீடு கிடைக்கும் போது, தமிழ்நாட்டுக்கு தேவையான வேலைவாய்ப்புகள் கிடைக்கும். நேரடியாக 2, 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மறைமுகமாக பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

வேளாண் துறை, தொழில் துறை, மின்சாரத்துறை ஆகிய 3 துறைகளிலும் தமிழகம் இன்றைக்கு சிறந்து விளங்குகிறது. ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தமிழ்நாடு முன்னுதாரணமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்காமல் ரூ.8 ஆயிரம் கோடி பாக்கி வைத்துவிட்டு சென்றார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் கொடுக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, கொடுக்கப்பட்டும் வருகிறது.

பா.ஜ.க. தீண்டத்தகாத கட்சி என்று இன்றைக்கு மு.க.ஸ்டாலின் சொல்லிக்கொண்டிருக்கிறார். அவர்களுடன் கூட்டணி வைத்து ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது இனித்தது. அப்போது அந்த கட்சி நல்ல கட்சி. இப்போது அந்த கட்சி கசக்கிறது. நான் பா.ஜ.க.வை ஆதரித்து பேசவில்லை. இவர்களின் (தி.மு.க.) நிலைமையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். 5 ஆண்டு காலம் பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்து ஆட்சி அதிகாரத்தில் தி.மு.க. இருந்தது. இதை மறுக்க முடியுமா?.

தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டத்தை கொண்டு வந்தீர்கள். எந்த பிரச்சினையை முடித்துவைத்தீர்கள். காவிரி பிரச்சினையை முடித்துவைத்தீர்களா?, முல்லைப்பெரியாறு பிரச்சினையை முடித்துவைத்தீர்களா?. பாலாறு பிரச்சினையை முடித்துவைத்தீர்களா?. எதுவுமே இல்லை. தி.மு.க.வினர் அதிகாரத்தில் இருந்து கொண்டு தங்களது குடும்பத்தை வளமாக்கிக்கொண்டார்கள். பா.ஜ.க.வுக்கு சரிவு ஏற்பட்டபோது, அந்த கூட்டணியை விட்டு தி.மு.க. வெளியே வந்தது.

தி.மு.க.வுக்கு கொள்கையும் கிடையாது, கோட்பாடும் கிடையாது. பிறகு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து, தி.மு.க.வினர் எல்லாம் மந்திரிகளாக ஆனார்கள். மத்திய மந்திரி சபையில் இடம்பெற்றார்கள். அப்போதாவது தமிழ்நாட்டுக்கு ஏதாவது செய்தார்களா?. எதுவும் கிடையாது.

அ.தி.மு.க.வை பொறுத்தவரை தமிழக மக்களுக்கு பிரச்சினை என்றால் உடனே குரல் கொடுப்போம். அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் காவிரி பிரச்சினைக்காக குரல் கொடுத்து நாடாளுமன்றத்தையே 23 நாட்கள் முடக்கினார்கள். தி.மு.க. எம்.பி.க்கள் தமிழக பிரச்சினைக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார்களா?. தி.மு.க.வை நம்பி எப்படி மக்கள் வாக்களிப்பார்கள்?

கோடநாடு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கூலிப்படையினரை தி.மு.க.வினர் ஜாமீனில் எடுத்திருக்கிறார்கள். அதில் ஒருவர் மு.க.ஸ்டாலினுடன் போட்டோவே எடுத்திருக்கிறார். கூலிப்படைக்கு வக்காலத்து வாங்கும் மு.க.ஸ்டாலினை எப்படி மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்? இந்த ஆட்சியில் குற்றங்களை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதிகார வெறி. இந்த ஆட்சிக்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். அ.தி.மு.க. அரசு இன்னும் எண்ணற்ற திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Leave a comment