தமிழகத்தில் பிப்ரவரி 10, 19-ந்தேதிகளில் பிரதமர் மோடி 2 கட்ட பிரசாரம்

206 0

தமிழகத்தில் பிப்ரவரி 10, 19-ந்தேதிகளில் பிரதமர் மோடி வருகை தர உள்ளார். சென்னை, மதுரை, கோவை பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி விட்டதால் பிரசார பணிகளில் பாரதீய ஜனதா தலைவர்கள் மும்முரமாகி உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும் வகையில் பிரசார வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது.

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தொண்டர்களை தயார்படுத்தும் வகையில் மாநிலம் வாரியாக பா.ஜனதா நிர்வாகிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பேசி வருகிறார். தமிழ்நாட்டில் இதுவரை 25 எம்.பி. தொகுதி பொறுப்பாளர்களுடன் அவர் காணொலி காட்சி மூலம் பேசி முடித்துள்ளார்.

மீதமுள்ள மற்ற தொகுதி பா.ஜனதா நிர்வாகிகளுடனும் விரைவில் மோடி பேச திட்டமிட்டுள்ளார். இந்த மாத இறுதிக்குள் இந்த பணிகள் அனைத்தும் முடிவடைய உள்ளது. அதன் பிறகு பிரதமர் மோடியின் சூறாவளி சுற்றுப்பயணம் தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் 5 தடவைக்கு மேல் வருவதற்கு பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். முதல் கட்டமாக வருகிற 27-ந்தேதி அவர் மதுரை வருகிறார். அன்று காலை மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார்.

அன்று மாலை மதுரை விமான நிலையம் எதிரே உள்ள ரிங்ரோடு சாலை பகுதியில் இருக்கும் மைதானத்தில் பா.ஜனதா தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற உள்ளது. அதில் கலந்து கொண்டு மோடி பேசுகிறார். இந்த கூட்டத்திற்கு 10 பாராளுமன்ற தொகுதிகளை சேர்ந்த சுமார் 2 லட்சம் பேரை திரட்ட தமிழக பா.ஜனதா மூத்த தலைவர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

இதைத் தொடர்ந்து மீண்டும் அடுத்த மாதம் (பிப்ரவரி) 2 தடவை தமிழ்நாட்டுக்கு வர பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். பிப்ரவரி 10, 19-ந்தேதிகளில் அவர் தமிழகம் வர உள்ளார். 10-ந்தேதி அவர் சென்னையில் நடக்கும் பிரமாண்ட கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

அதன் பிறகு 19-ந்தேதி மூன்றாவது முறையாக மோடி தமிழகம் வருகிறார். அன்று அவர் கோவையில் நடக்கும் பிரமாண்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பா.ஜனதாவுக்கு ஆதரவு திரட்டுவார் என்று தெரிகிறது. ஆனால் 19-ந் தேதி நடக்கும் கூட்டத்தை எந்த ஊரில் நடத்துவது என்பது இன்னும் உறுதியாக வில்லை.

39 எம்.பி. தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்கும் வகையில் இந்த இரு கூட்டங்களும் நடத்தப்பட உள்ளது.

இது தொடர்பாக தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி அடுத்த மாதம் (பிப்ரவரி) 10 மற்றும் 19 ஆகிய 2 நாட்கள் தமிழகத்துக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த மாதம் 27-ந்தேதி மதுரையில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் பேசுகிறார். இந்த கூட்டத்தில் தென் மாவட்டங்களை சேர்ந்த தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் பயண திட்டத்தின் போது வட மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையில் இடங்கள் தேர்வு செய்யப்படும். ஒருநாள் சென்னையில் கூட்டம் நடத்தப்படும். இன்னொரு நாள் எங்கு நடத்தலாம் என்பது பற்றி நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவு செய்து அறிவிக்கப்படும்.

பா.ஜனதா தலைமையில் வலுவான கூட்டணி அமையும். தற்போது தமிழக பொறுப்பாளரான பியூஸ் கோயல் பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் தமிழக வருகை தள்ளி போயிருக்கிறது. விரைவில் அவர் தமிழகத்துக்கு வந்து கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தையில் ஈடுபடுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment