அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை நடக்கிறது – ஏற்பாடுகள் தீவிரம்!

26870 0

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை நடைபெற உள்ளது. இதற்காக 850 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர். 

ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் காளைகளுக்கான அடையாள அட்டைகள் வழங்குவதற்கு அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பதிவு செய்யப்பட்டது.

இதில் மாட்டின் உரிமையாளர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டை முறையாக ஸ்கேன் செய்யப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டது.

மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கோவை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து 1400 பேர் பங்கேற்று இந்த அடையாள அட்டையினை வாங்கிச் சென்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில் கடந்த ஆண்டு போல் இல்லாமல் இந்த வருடம் தகுந்த இடங்களாக தேர்வு செய்து மாடுபிடி வீரர்களையும், காளைகளையும் பதிவு செய்துள்ளனர். இது அனைத்து தரப்பிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. இதுபோல் வருங்காலங்களிலும் இந்த நடைமுறையே கடைபிடிக்க வேண்டும் என்றார்.

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் வர்ணம் பூசும் பணி நடந்தது. இதுதவிர பார்வையாளர்கள் அமரும் இரும்பு கம்பிகளால் ஆன மேடைகள், பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

இதுதவிர மாடுகள் வெளியேறி செல்லும் மைதானப் பகுதிகளில் இரண்டு அடுக்கு மரத் தடுப்பு பாதுகாப்பு வேலிகள் போடப்பட்டுள்ளது. காளைகள் நிறுத்தும் இடம், வீரர்கள் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவைகள், தயார் நிலைக்கு வந்துள்ளது.

பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பொது சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை உயர் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 


Leave a comment