பொங்கல் பரிசு கொடுத்த வயிற்றெரிச்சலில் முதல்வர் மீது அபாண்ட பழி சுமத்துகிறார்கள்- அமைச்சர் கருப்பணன்

234 0

பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு கொடுத்த வயிற்றெரிச்சலில் முதல்வர் மீது அபாண்ட பழி சுமத்துவதாக அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.

இதில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு, அந்தியூர் ராஜா கிருஷ்ணன், பவானிசாகர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட கலெக்டர் கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் மற்றும் மாவட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் கூட்டத்தில் அரசு முதன்மை செயலாளர் பாலச்சந்திரனும் கலந்து கொண்டார்.

கூட்ட முடிவில் அமைச்சர் கே.சி.கருப்பணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரும் சிறப்பாக ஆட்சி நடத்தி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள்.

தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அனைவராலும் பாராட்டப்படுகிறது. மற்ற வகை பிளாஸ்டிக் பொருட்களும் படிப்படியாக தடை செய்யப்படும்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருட்களை தயாரிக்கும் தொழிலை ஊக்குவிக்க அரசு தயாராக உள்ளது.

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவத்தில் முதல்வர் மீது எதிர்கட்சியினர் அபாண்ட பழி சுமத்துகிறார்கள். பொது மக்களுக்கு பொங்கல் பரிசு கொடுத்து வருகிறோம். இது எதிர்கட்சியினருக்கு வயிற்றெரிச்சலையும், பொறாமையையும் ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அமைச்சர் கருப்பணன் கூறினார். 

Leave a comment