காலியானது டெக்சாஸ் காப்பகம்- கடைசி அகதிகள் குழந்தையும் அனுப்பி வைப்பு

320 0

அமெரிக்காவில் டெக்சாஸ் மாநில காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த அகதிகள் குழந்தைகளில், கடைசி குழந்தையும் தற்போது அங்கிருந்து பெற்றோரிடம் அனுப்பி வைக்கப்பட்டதால் காப்பகம் மூடப்படுகிறது. 

அமெரிக்காவில் எல்லை வழியாகச் சட்டவிரோதமாக குடியேறும் அகதிகளைக் கட்டுப்படுத்தும் வகையில் அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார். கடந்த ஆண்டு அவர் பிறப்பித்த உத்தரவின்படி, மெக்சிகோ எல்லை வழியாக வரும் அகதிகளைச் சட்டவிரோத குடியேற்றத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து டெக்சாசில் உள்ள டோர்னில்லோ காப்பகத்தில் தங்கவைத்தனர். கிட்டத்தட்ட 6,200 குழந்தைகள் காப்பகத்தில் வைக்கப்பட்டனர்.

அமெரிக்க சட்டப்படி சட்டவிரோத குடியேற்றத்தில் குழந்தைகள் மீது சட்டநடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதால், குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர். ஆனால் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, சட்டவிரோதமாக நுழையும் அகதிகளிடம் இருந்து அவர்களின் குழந்தைகளை பிரித்து காப்பகத்தில் தங்கவைக்கும் திட்டத்தை அதிபர் டெனால்ட் டிரம்ப் ரத்து செய்தார்.

அதன்பின்னர் காப்பகத்தில் உள்ள குழந்தைகளை அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியது. படிப்படியாக குழந்தைகள் அவர்களின் பெற்றோர்கள் இருக்கும் முகாம்களில் ஒப்படைக்கப்பட்டனர். இந்த பணி தற்போது முடிவடைந்துள்ளது. கடைசி குழந்தையும் டோர்னில்லோ காப்பகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் வில் ஹர்ட் உறுதி செய்துள்ளார்.


இந்த காப்பகம் மூடப்பட்டாலும், பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் இன்றி அகதிகள் குழந்தைகள் வந்தால், அவர்களை தங்க வைப்பதற்கு இங்குள்ள முகாம் போன்ற வசதிகள் அவசியம் தேவைப்படும் என குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கான சுகாதார மற்றும் மனித சேவைகள் நிர்வாகத்தின் துணை செயலாளர் லின் ஜான்சன் தெரிவித்துள்ளார்

Leave a comment