பொங்கல் சிறப்பு பஸ்கள் இன்று மாலை இயக்கம்- 5 இடங்களில் இருந்து புறப்படுகின்றன

212 0

பொங்கல் பண்டிகைக்காக வெளியூர்களுக்கு செல்லக்கூடிய சிறப்பு பஸ்கள் இன்று மாலை முதல் இயக்கப்படுகின்றன. சென்னையில் 5 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் புறப்படுகின்றன. 

பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடும் வகையில் அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பொதுமக்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய வசதியாக விரிவான ஏற்பாடுகளை போக்குவரத்து கழக அதிகாரிகள் செய்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையை கொண்டாட செல்ல வசதியாக 14-ந்தேதி விடுமுறையும் விடப்பட்டுள்ளது. நாளை (சனிக்கிழமை) முதல் 6 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனால் இன்று பிற்பகலுக்கு பின்னர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு வழக்கமாக தினமும் இயக்கப்படும் 2,275 பஸ்களுடன் சிறப்பு பஸ்களும் விடப்பட்டுள்ளது.

4 நாட்களுக்கு சேர்த்து சென்னையில் இருந்து 14,263 பஸ்கள் இயக்கப்படுகிறது.

வெளியூர் செல்லக்கூடிய பஸ்கள் நெரிசலில் சிக்காமல் செல்ல வசதியாக 5 இடங்களில் இருந்து பஸ்கள் புறப்பட்டு செல்கின்றன. கோயம்பேடு, தாம்பரம் அண்ணா பஸ்நிலையம், ரெயில் நிலைய பஸ் நிறுத்தம், மாதவரம் புதிய பஸ் நிலையம், பூந்தமல்லி பஸ் நிலையம் மற்றும் கே.கே.நகர் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பஸ் நிலையங்களுக்கு முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் 5 பஸ் நிலையங்களுக்கும் 250 மாநகர பஸ்கள் இயக்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகை முடிந்து ஊர் திரும்ப வசதியாக வருகிற 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை மற்ற ஊர்களில் இருந்து சென்னைக்கு மொத்தமாக 3,776 பஸ்களும், முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 7,841 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

அரசு பஸ்களில் சொந்த ஊர்களுக்கு செல்லவும், சொந்த ஊர்களில் இருந்து திரும்புவதற்கும் இதுவரை 1.25 லட்சம் பயணிகள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லவும் சொந்த ஊர்களில் இருந்து திரும்பவும் அரசு பஸ்களில் பயணிப்பதற்காக தமிழகம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 25 ஆயிரத்து 808 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

இதன்மூலம் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.6 கோடியே 8 லட்சத்து 82 ஆயிரம் வசூல் கிடைத்துள்ளது. நேற்று ஒருநாள் மட்டும் அரசு பஸ்களில் 14,551 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதன்மூலம் ரூ.69.02 லட்சம் வசூல் ஆகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment