கருவில் கரையும் புதிய அரசமைப்பு: கதறும் சம்பந்தனும் சுமந்திரனும்

9 0

“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. தென்இலங்கையின் அரசியல் சூழலும் அதற்கு உகந்த ஒன்றாக இல்லை. அப்படிப்பட்ட நிலையில், சம்பந்தனும் சுமந்திரனும் புதிய அரசமைப்பு தொடர்பில், வெளிப்படுத்திவரும் நம்பிக்கைப் பேச்சுகள் எதை நோக்கியது?” என்று வெளிநாட்டுத் தூதரக அதிகாரியொருவர் இந்தப் பத்தியாளரிடம் கடந்த வாரம் கேட்டார்.   

புதிய அரசமைப்புக்கான முயற்சிகள், கிட்டத்தட்ட முழுமையாகவே முடங்கிவிட்டன. மைத்திரியின் ‘ஒக்டோபர் 26’ சதிப்புரட்சிக்குப் பின்னராகப் பிறந்திருக்கின்ற 2019, தேர்தல்களின் ஆண்டாகவே இருக்கப் போகின்றது.   

அப்படிப்பட்ட நிலையில், மைத்திரி- மஹிந்த தரப்பு மாத்திரமல்ல, ரணில் தரப்பும் புதிய அரசமைப்புப் பற்றிப் பேசுவதை விரும்பவில்லை. ஏன், ஜே.வி.பி கூட விரும்பவில்லை. சுமந்திரனின் அவசரத்துக்கு அரசமைப்பை நிறைவேற்றிவிட முடியாது என்று அநுரகுமார கூறுகிறார்.  ஆனாலும், சம்பந்தனும் சுமந்திரனும் புதிய அரசமைப்புத் தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடமும் தமிழ் மக்களிடமும் தொடர்ச்சியாகப் பேச வேண்டியிருக்கிறது.  

புதிய அரசமைப்பின் அவசியமொன்று, இந்த நாட்டில் நீடித்து வருவது தொடர்பில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அந்தப் புதிய அரசமைப்பின் உள்ளடக்கங்கள் ‘அனைவரையும் சமமாக மதிக்கும் ஜனநாயக விழுமியங்கள் சார்ந்து இருக்க வேண்டும்; மக்களின் இறைமை காக்கப்பட வேண்டும்’ என்கிற அடிப்படையில் எழும்போதுதான், மாற்றுக்கருத்துகளை தென்இலங்கை வெளிப்படுத்த ஆரம்பிக்கின்றது.   

தென்இலங்கை வெளிப்படுத்தும் மாற்றுக்கருத்துகள் என்பது, அடிப்படையில் ஆட்சி அதிகாரத்தை அடைவது அல்லது தக்க வைத்துக் கொள்வது சார்ந்தே இருந்து வருகின்றது. அதுதான், ‘பௌத்த சிங்கள இனவாதம்’ ஆட்சி அதிகாரத்தை அடைவதற்கான வழி என்கிற புரிதலை, தென் இலங்கையில் ஏற்படுத்தியும் விட்டது.   

ஆனால், ஆட்சி அதிகாரத்தை அடைவதற்கு அனைத்துத் தருணங்களிலும் இனவாதம் முழுமையாகக் கைகொடுத்ததில்லை. அப்படியான தருணங்களில், தமிழ்- முஸ்லிம் மக்களின் ஆதரவுத் தளத்தைத் தேடி, தென்இலங்கை ஓடிவர ஆரம்பிக்கின்றது.  

அப்படியான சந்தர்ப்பமொன்றில்தான், அதாவது, போர் வெற்றிவாதத்துடன் அசைக்க முடியாத பலத்துடன் இருந்த ராஜபக்‌ஷக்களை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கான ஆரம்ப கட்டப் பேச்சுகள் சிங்கப்பூரிலும், ஐரோப்பிய நாடுகள் இரண்டிலும் 2013, 2014ஆம் ஆண்டுகளில் இடம்பெற்றன.  இந்தப் பேச்சுகளில் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளை முக்கிய தரப்புகளாக மேற்கு நாடுகள் ஒன்றிணைத்தன. தமிழ்த் தரப்பை எம்.ஏ. சுமந்திரனும் தென் இலங்கையை (ஐ.தே.க) மங்கள சமரவீரவும் வழிநடத்தினார்கள்.   

இந்தப் பேச்சுவார்த்தைகள் அனைத்திலும் சமஷ்டியை அண்மித்த தீர்வொன்றை, தமிழ் மக்களுக்குப் புதிய அரசமைப்பின் ஊடாக வழங்குவது என்று, தமிழ்த் தரப்பிடம் மேற்கு நாடுகளும் ரணிலின் பிரதிநிதியாக மங்களவும் மீண்டும் மீண்டும் வாக்குறுதியை வழங்கி வந்தார்கள்.  ஒரு கட்டத்தில் சமஷ்டிக்காகத் தென் இலங்கையில் கூட்டங்களை நடத்தி, மக்களை இணங்கச் செய்வேன் என்று மங்கள, தமிழ்த் தரப்பிடம் கூறினார். இந்தக் கட்டங்களில் இருந்துதான், ஆட்சி மாற்றத்துக்கான ஒத்துழைப்பை, கூட்டமைப்பு வெளிப்படையாக வெளிப்படுத்த ஆரம்பித்தது.  

திம்புப் பேச்சுகளில் சம்பந்தன் கலந்து கொண்டிருந்தாலும், மூன்றாம் நாட்டின் மத்தியஸ்தத்தோடு (இரகசியமாக) நடத்தப்பட்ட பேச்சுகளில் சுமந்திரன் பங்கேற்பது இதுவே முதல்முறை. தமிழ்த் தேசிய அரசியல் எழுச்சி பெற்ற காலத்துக்குப் பிறகு, தென்இலங்கையோடு பலமுறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருக்கின்றன; ஒப்பந்தங்கள்     கைச்சாத்திடப்பட்டிருக்கின்றன.   

ஆனால், ஆயுதப் போராட்டத்தின் எழுச்சிக்குப் பின்னரே, மூன்றாம் நாடொன்றின் தலையீட்டுடனான பேச்சுகள் இலங்கையில் இடம்பெற்றிருக்கின்றன. இந்தப் பேச்சுகள் அனைத்தும், ஒப்பந்தங்கள் மீறப்பட்டும், இணக்கப்பாடுகள் காணப்படாமலுமே முடிந்திருக்கின்றன.  

 குறிப்பாக, இலங்கை- இந்திய ஒப்பந்தமே, அப்போது, இந்தியாவுக்கு நெருக்கமாக இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒப்புதல் இன்றி மேற்கொள்ளப்பட்ட ஒன்று.  

ஆனால், ராஜபக்‌ஷக்களை அரங்கிலிருந்து அகற்றுவதற்கான துருப்புகளாக சர்வதேச ரீதியில் போர்க்குற்றம் என்கிற விடயம் வீச்சம் பெற்றது. உள்நாட்டில், ராஜபக்‌ஷ சகோதரர்களின் அராஜகம் எல்லை மீறி, மக்களை அல்லற்படுத்தியது.   

இந்த இரண்டு கட்டங்களையும் இணைக்கும் புள்ளியில்தான், ஆட்சி மாற்றத்தை வெற்றிகரமாக நிகழ்ந்த முடியும் என்ற கட்டத்தில், சுமந்திரனின் சமஷ்டிக்கு அண்மித்த கோரிக்கைகளை, மேற்கு நாடுகளும் மங்களவும் சாத்தியம் என்று சத்தியம் பண்ணாத குறையாக ஒப்புவித்தனர்.   

இந்த இடத்திலிருந்துதான், சம்பந்தனும் சுமந்திரனும் தங்களின் காலத்துக்குள் தமிழ் மக்களுக்கான தீர்வை அடைந்துவிட முடியும் என்கிற நம்பிக்கைகளை அதீதமாக வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள். அதன் போக்கில்தான், சுமந்திரன் நேரடியாக மக்களைச் சந்தித்து ஆணைபெறும் கட்டத்துக்கு வந்தார்.  

 அதாவது, அரசமைப்பு வரைபுப் பணியில் தான் ஈடுபடும் போது, கடந்த காலங்களில் அவரை நோக்கி முன்வைக்கப்பட்ட “பின்கதவு எம்.பி” என்கிற வாதம், தன்னுடைய செயற்பாடுகளை மலினப்படுத்திவிடும் என்பதால், போட்டியிட்டு வெற்றி பெறும் கட்டத்துக்கு வந்தார். யாழ். மய்யவாத அரசியல் அரங்குக்குள்  அவர் பெற்ற வெற்றி, அவரை கட்சிக்குள்ளும், வடக்கு அரசியலிலும் மேலும் பலப்படுத்தியது. அது, கிட்டத்தட்ட சம்பந்தனுக்கு நிகரான ஒருவராக மாற்றியது. அதனை, சம்பந்தனும் விரும்பியே ஏற்றிருந்தார்.  

ராஜபக்‌ஷக்களை ஆட்சியிலிருந்து அகற்றியதும், தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் எனும் கட்டத்தை கூட்டமைப்பு எட்டியதும், சம்பந்தனையும் சுமந்திரனையும் மிக முக்கியஸ்தர்களாக மாற்றியது. தன்னுடைய அரசியலின் மிகப்பெரும் பதிவாக, தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுத்த தலைவர் எனும் விடயம் இடம்பெற வேண்டும் என்கிற ஓர்மத்தை சம்பந்தன் வகுத்துக்கொண்டார்.   

அதற்கான களம், ஒட்டுமொத்தமாக மலர்ந்திருப்பதாகவும் அவர், நம்ப ஆரம்பித்தார். அவரும் சுமந்திரனும் அனைத்து இடங்களிலும் அந்த நம்பிக்கைகளையே பிரதிபலிக்க ஆரம்பித்தார்கள். அந்தப் போக்கே, வழிநடத்தல் குழுக் கூட்டங்களின் போது, அதீத விட்டுக்கொடுப்புகளுக்குக் காரணமானது. சமஷ்டி என்கிற வார்த்தைப் பிரயோகம் நீக்கப்பட்டமை, பௌத்தத்துக்கு முதலிடம் உள்ளிட்ட விடயங்கள், வழிநடத்தல் குழுக் கூட்டங்களில் குறிப்பிட்டளவு விவாதிக்கப்பட்டது. 

ஆனாலும், ஒரு கட்டத்தில் அவற்றை விட்டுக்கொடுப்பது சார்ந்து சம்பந்தனும் சுமந்திரனும் வெளிப்படுத்திய இணக்கம், எப்படியாவது, தீர்வொன்றை அரசமைப்பினூடாக பெற்றுவிட வேண்டும் எனும் தோரணையில் இருந்தது. அதை ஒருவகையில், சந்திரிகா காலத்தில், திருச்செல்வம் வரைந்த பொதி பற்றிய இன்றைய சிலாகிப்புகள் போல, காலந்தாழ்த்திய ஒன்றாக இல்லாமல், காலத்தில் செய்த ஒன்றாக இருக்க வேண்டும் எனும் போக்கில் வெளிப்படுத்தப்பட்டது.  

சம்பந்தனையும் சுமந்திரனையும் தமிழ் ஊடகச் சூழல், கேள்விகளாலும் விமர்சனங்களாலும் உரித்தெடுத்துவிட்டது. ஆனாலும், அவற்றையெல்லாம் எதிர்கொள்வது தொடர்பில் அவர்கள் வெளிப்படுத்திய ஓர்மம் ஒரு கட்டத்தில், அவர்களையே, புதிய அரசமைப்பு நிறைவேறிவிடும் என்று தீர்க்கமாக நம்ப வைத்துவிட்டது.  

2016களின் ஆரம்பத்தில் கனடாவில் ஊடகவியலாளர்களுடான சந்திப்பொன்றில் பேசிய சுமந்திரன், “சம்பந்தன் காலத்தில் தீர்வொன்று பெறப்படாமல் விட்டால், தமிழ் மக்களால் ஒருபோதும் தீர்வைப் பெறமுடியாது போய்விடும்” எனும் தொனியில் பேசியிருந்தார். (சுமந்திரன், சம்பந்தனை தலைவராக மட்டும் கொள்ளவில்லை. தன்னை ஒட்டுமொத்தமாக ஆட்கொண்ட ஆளுமையாகவும் இரசிக மனநிலையோடு எதிர்கொள்கிறார்)   

இவ்வாறான போக்கில் இருந்துதான், கடந்த நான்கு வருடங்களாகப் புதிய அரசமைப்பு தொடர்பில் அவர்கள் இருவரும் இயங்கி வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு தருணத்திலும் அவர்களின் நம்பிக்கைகள் குறையும் போதும், அதைக் கடந்து இலக்கினை அடைவது தொடர்பில், என்றைக்கும் இல்லாத அளவுக்கு இறங்கியும் இணங்கியும் செயற்படத் தலைப்பாட்டார்கள். அதுவே, அவர்களை நோக்கிய வசைகளையும் பொழிய வைத்தது.  

அவ்வாறான கட்டத்திலிருந்துதான், கருவில் கலையும் குழந்தையாக இருக்கும் புதிய அரசமைப்பு தொடர்பிலான ஏற்பாடுகளை, சம்பந்தனும் சுமந்திரனும் எப்படியாவது காப்பாற்றி விடவேண்டும் என்று கதறுகிறார்கள். அந்தக் கதறலைத்தான், நம்பிக்கையாக மக்களிடம் திரும்பத் திரும்ப வெளிப்படுத்துகிறார்கள்.

ஆனால், புதிய அரசமைப்பு என்கிற கரு, கருவிலேயே கலைக்கப்பட்டுவிட்டது என்கிற உண்மையை தமிழ் மக்கள் உணர்ந்து கொண்டுதான், அவர்கள் இருவரையும் அணுகுகிறார்கள். அதில், ஒருவகையான பச்சதாப உணர்வும் உண்டு.   

புருஜோத்தமன் தங்கமயில்

Related Post

184பேர் பலியெடுக்கப்பட்ட சந்துருக்கொண்டான் படுகொலை!

Posted by - September 9, 2017 0
1990ஆம் ஆண்டு. புரட்டாதி 9ஆம் திகதி. வடகிழக்கே சோகத்தில் மூழ்கிய நாள். வந்தாருமூலைப் பல்கலைக்கழகத்தில் 158பேர் பலியெடுக்கப்பட்டு நான்கு நாட்கள்தான்.

வள்ளுவத்தின் வழி நின்று வரலாற்று நாயகர்களின் கனவை நனவாக்குவோம்! – ம.செந்தமிழ்!

Posted by - November 26, 2016 0
இரண்டாயிரம் வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் குன்றா இளமையுடன் அள்ள அள்ள குறையாத அறிவுச் சுரங்கமாக விளங்கிவரும் உலகப் பொது மறையான திருக்குறள் தந்த வள்ளுவப் பெருந்தகை வகுத்த…

ஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது?

Posted by - March 18, 2018 0
ஜெனீவாக் கூட்டத்தொடர்களில் தமிழ்த்தரப்பானது மைய நிகழ்வில் பங்குபற்றுவதில்லை. மாறாக பக்க நிகழ்வுகளில் (side events)தான் பங்கேற்பதுண்டு என்ற ஒரு விமர்சனம் எள்ளளோடு முன்வைக்கப்படுவதுண்டு.

யாழ்ப்பாணத்து வன்முறைகள்: கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கட்டமைப்புக்களின் அவசியம்!

Posted by - July 8, 2018 0
யாழ்ப்பாணத்தில் அண்மையில் மிகக் குறுகிய காலத்திற்குள் நடந்த வன்முறைகள் தொடர்பில் முக்கிய அரசியற் பிரமுகர்கள் சிலர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள்

விஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்!

Posted by - July 16, 2018 0
விஜயகலாவின் பேச்சால் அவர் இழந்தவை எவை? , பெற்றவை எவை? உடனடிக்கு அவர் தனது பிரதி அமைச்சர் பதவியை இழந்திருக்கிறார். ஆனால் நீண்ட எதிர்காலத்துக்கு தனது நாடாளுமன்ற…

Leave a comment

Your email address will not be published.