அரசியல்வாதிகளை விட மாணவர்களுக்கு தான் அரசியலை தெரிந்துகொள்ளும் வாய்ப்பு அதிகம்!

215 0

அரசியல்வாதிகளை விட மாணவர், இளைஞர்களுக்கு தான் அரசியலை தெரிந்துகொள்ளும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக மு.க.ஸ்டாலின் பேசினார்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் தி.மு.க. இளைஞரணி அறக்கட்டளை சார்பில் அண்ணா பிறந்தநாளையொட்டி மாணவ-மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி சங்கரன்கோவிலில் நேற்று நடைபெற்றது.

இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி, வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

இளைஞர் அணி என்பது என்னை பொறுத்தவரையில் அதை இளைஞர் அணி என்றுகூட சொல்லமாட்டேன், கழகத்தினுடைய இதய அணி என்று தான் சொல்லத்தோன்றுகின்றது. ஏனென்றால் இளைஞர்கள் தான் இன்றைக்கு இருக்கக்கூடிய மாணவர்கள், அவர்கள் தான் நாளைக்கு எதிர்காலத்தில் இருக்கக்கூடிய தலைவர்களாக வரக்கூடியவர்கள். ஆகவே, அந்த உணர்வோடுதான் இதை குறிப்பிட்டு சொன்னேனே தவிரவேறல்ல.

எப்படி தலைவர் கருணாநிதி 14 வயதில், தான் பிறந்த திருவாரூர் நகரத்தில், திருவாரூரின் தெற்கு வீதியிலே நம்முடைய தாய்மொழியாய் இருக்கக்கூடிய அழகுத்தமிழ் மொழிக்கு ஆபத்து வந்த நேரத்தில் அதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்று சொல்லி, அங்கிருக்கக்கூடிய மாணவர்களை ஒன்று திரட்டி திருவாரூர் வீதியில் ஊர்வலம் நடத்தினார்.

அப்போது கையில் புலி, வில், கயல் பொதிந்திருக்கக்கூடிய தமிழ் கொடியேந்தி கொண்டு, ‘ஓடிவந்த இந்தி பெண்ணே கேள்! நீ தேடிவந்த கோழை உள்ள நாடு இதுவல்லவே’ என்று போர்பரணி பாடி அதன்மூலமாக பொதுவாழ்வில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு ஒரு மாபெரும் தலைவராக மறைந்தும் மறையாமல் இன்றைக்கும் நம்முடைய உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய ஒரு தலைவராக விளங்கி கொண்டிருக்கக்கூடியவர் கருணாநிதி.

இன்றைக்கு அரசியல்வாதிகளாக இருக்கக்கூடிய எங்களைவிட மாணவர் சமுதாயத்தில் இளைஞர் சமுதாயத்தில் இருக்கக்கூடிய உங்களுக்குத்தான் இன்னும் அதிகமாக அரசியலை தெரிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு வந்து சேர்கின்றது என்பதை நாம் மறுத்திட, மறைத்திட முடியாது.

ஆகவே, நாட்டில் நடைபெறக்கூடிய சூழ்நிலைகளை எல்லாம் பார்த்துக்கொண்டிருக்கின்றீர்கள். இன்றைக்கு மத்தியில் ஒரு ஆட்சி, மாநிலத்தில் ஒரு ஆட்சி. இந்த இரண்டு ஆட்சிகளும் எந்த நிலையில் நடைபெற்று கொண்டிருக்கின்றது என்பதை நீங்கள் புரிந்துகொண்டாக வேண்டும்.

தனிப்பட்ட முறையில் எதையும் நான் விமர்சித்து பேச விரும்பவில்லை ஆட்சியினுடைய தன்மையை இன்றைக்கு நீங்கள் அறிந்து கொண்டு புரிந்துகொண்டு அதற்கு ஏற்ற வகையில் வரக்கூடிய காலக்கட்டத்தில் நாம் எந்த நிலையில் இருந்திட வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யக்கூடிய நிலையில் நிச்சயமாக உங்களுடைய உணர்வு இருக்குமென்று நான் நம்புகின்றேன்.

அதை மனதில் வைத்துக்கொண்டு அதற்கு ஏற்ற வகையில் நீங்கள் செயல்பட வேண்டும். உங்களை எல்லாம் நான் இந்த நேரத்தில் அன்போடு கேட்டுக்கொண்டு. பரிசு பெற்றிருப்பவர்களுக்கு வாழ்த்து சொல்லுவதற்கு மட்டுமல்ல, அந்த பரிசுகளை பெற முடியாத நிலையில் இருக்கும் மாணவ செல்வங்களுக்கு வாழ்த்து சொல்லவேண்டியது என்னுடைய கடமை. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment