மாநில அரசு கோரும் நிதியை முழுவதுமாக மத்திய அரசு வழங்குவதில்லை சட்டசபையில் பட்டியலிட்டு முதல்-அமைச்சர் தகவல்

203 0

இயற்கை சீற்றங்களின்போது நிவாரணத்துக்காக மாநில அரசு கோரும் நிதியை முழுவதுமாக மத்திய அரசு வழங்குவதில்லை என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தமிழக சட்டசபையில் கஜா புயல் பாதிப்புகள் குறித்து தி.மு.க. எம்.எல்.ஏ. மெய்யநாதன் (ஆலங்குடி) நேற்று விவாதித்தார். அவருக்கு பதிலளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

2007-08-ம் ஆண்டில் கனமழையால் தி.மு.க. ஆட்சியின்போது இதேபோல் இயற்கை சீற்றம் ஏற்பட்டது. அப்போது தற்காலிக நிவாரணத்திற்காக 449.91 கோடி ரூபாய், நீண்டகால சீரமைப்பிற்கு 689.87 கோடி ரூபாய் என மொத்தம் 1,139.78 கோடி ரூபாய் கோரப்பட்டது. ஆனால் மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட நிதி 142.95 கோடி ரூபாய்தான்.

2008-09-ம் ஆண்டில் நிசா புயல் ஏற்பட்டபோது, தற்காலிக நிவாரணத்திற்காக கோரப்பட்ட நிதி 2,105.71 கோடி ரூபாய், நீண்டகால சீரமைப்பிற்கு 1,683.53 கோடி ரூபாய் என மொத்தம் 3,789 கோடி ரூபாய் என்று கணக்கிட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டதில், மத்திய அரசு வழங்கியது 570.17 கோடி ரூபாய்தான்.

2010-11-ம் ஆண்டில் வெள்ளம் வந்தபோது, தற்காலிக நிவாரணத்திற்காக 2,125.82 கோடி ரூபாயை தி.மு.க. அரசு கேட்டு மத்திய அரசிற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது நீண்ட கால சீரமைப்பிற்கு எதுவும் கேட்கவில்லை. ஆனால் மத்திய அரசு வழங்கியது 317.17 கோடி ரூபாய்தான்.

நாம் கேட்கிற நிதியை எப்போதுமே மத்திய அரசு ஒதுக்கியதே இல்லை. அப்போது மாநிலத்திலும் உங்கள் ஆட்சிதான், மத்தியிலும் நீங்கள் அங்கம் வகித்தீர்கள். நீங்கள் அங்கம் வகிக்கின்றபோது, இவ்வளவு நிதி தான் கிடைக்கப்பெற்றது.

நாங்கள் கூட்டணி கிடையாது. மத்தியிலே ஆட்சி அதிகாரத்திலே நாங்கள் இல்லை. இருந்தாலும், நம்முடைய மக்களுக்கு தேவையான நிவாரணம் வழங்கப்பட வேண்டும். நிரந்தர நிவாரணம் வழங்கப்பட வேண்டும். தற்காலிக நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

அதற்காக நாம் கோரிக்கை வைத்தோம். ஆனால் கோரிக்கைகளில் குறைந்த அளவு தான் கிடைத்தது. மேலும் நாங்கள் கேட்டிருக்கிறோம். நிச்சயமாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
நான் அறிவித்தபடி ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தரப்படுமா என்ற ஒரு சந்தேகத்தை எழுப்பியிருக்கிறீர்கள். நிச்சயமாக 1 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். அதுமட்டுமல்ல, கிட்டத்தட்ட 4 ஆண்டுகளில் 2 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்ற செய்தியும் சொல்லியிருக்கிறோம்.

வீடில்லாத மக்களுக்கு, கூரை வீட்டிலே இருந்து இந்த புயலால் பாதிக்கப்பட்டு வசிக்க இடமில்லாமல் இருக்கின்ற அந்த ஏழை மக்களுக்கு இந்த அரசு நிச்சயம் சொன்னதை செய்யும். இவ்வாறு அவர் பதிலளித்தார்.

Leave a comment