கட்சி வேறுபாடு இன்றி தலைவர்கள் புகழாரம்

229 0

கருணாநிதி மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ருணாநிதி மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவருக்கு கட்சி வேறுபாடு இன்றி தலைவர்கள் புகழாரம் சூட்டினார்கள்.

தமிழக சட்டசபை கூட்டம் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்தக் கூட்டத்தில், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.டி. உக்கம்சந்த் (மதுராந்தகம் தொகுதி), சி.கனகதாரா (பேரணாம்பட்டு), எஸ்.சண்முகநாதன் (ஆலங்குடி), சை.நாகூர் மீரான் (கடையநல்லூர்), பே.வே.சீ.வெங்கடேசன் (காவேரிப்பட்டினம்), பெ.மலைச்சாமி (மேலூர் வடக்கு), பரிதி இளம்வழுதி (பெரம்பூர் – எழும்பூர்), ரா.சந்திரசேகரன் (கம்பம்), கோ.வீரய்யன் (நாகப்பட்டினம்), எல்.சந்தானம் (சோழவந்தான் – உசிலம்பட்டி), வி.ஜி.தனபால் (குடியாத்தம்), பி.எஸ்.உலகரட்சகன் (செய்யாறு) ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அனைவரும் 2 நிமிடங்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தமிழக முன்னாள் கவர்னர் பீஷ்ம நாராயண் சிங், நாடாளுமன்ற மக்களவை முன்னாள் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்த ‘நெல்’ ஜெயராமன், 5 ரூபாய்க்கு சிகிச்சை அளித்த டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரன் மற்றும் ‘கஜா’ புயல் தாக்குதலில் பலியானவர்கள், புயல் நிவாரண பணிகள் மேற்கொண்டபோது இறந்த பணியாளர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்பின்னர், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், திருவாரூர் தொகுதி உறுப்பினருமான கருணாநிதி, திருப்பரங்குன்றம் தொகுதி உறுப்பினர் ஏ.கே.போஸ் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த இரங்கல் தீர்மானங்களை முன்மொழிந்து அவை முன்னவரும், துணை முதல்-அமைச்சருமான

பன்னீர்செல்வம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக அரசியலில் மட்டுமின்றி இந்திய அரசியலிலும் தனது முத்திரை பதித்தவரும், 1957-ம் ஆண்டு முதல் தொடர்ந்து போட்டியிட்ட அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்ற சிறப்புக்குரியவரும், 1984-1986-ம் ஆண்டுகளில் சட்டமன்ற மேலவை உறுப்பினராக பணியாற்றியவரும், 1969-ம் ஆண்டு தமிழக முதல்- அமைச்சராக முதன்முறையாக பொறுப்பேற்று, 5 முறை தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராகப் பணியாற்றிய பெருமை பெற்றவரும், 50 ஆண்டு காலம் தி.மு.க. தலைவராகத் திகழ்ந்தவரும், 15-வது சட்டமன்றப் பேரவையின் உறுப்பினரான மு.கருணாநிதி 7-8-2018 அன்று மறைவுற்ற செய்தி அறிந்து இப்பேரவை அதிர்ச்சியும், ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது.


மறைந்த மு.கருணாநிதி தனது 14 வயதிலேயே சமூக இயக்கங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். சமூக நீதிக்காகப் போராடியவர். அரசியல் மட்டுமின்றி தமிழ் திரைப்படங்களுக்கு திரைக்கதை, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வசனங்களை எழுதி தனது திறமையை வெளிப்படுத்தியவர். தமிழ் மொழி மீது மிகுந்த பற்று கொண்டு, இலக்கியம், நாடகம், கவிதை, பத்திரிகை என பல்வேறு துறைகளில் எண்ணற்ற சாதனைகள் படைத்து, அனைவராலும் பாராட்டப்பட்டவர்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், 15-வது சட்டமன்றப் பேரவையின் உறுப்பினருமான மு.கருணாநிதியின் மறைவு தமிழ்நாட்டுக்கு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வருந்தும் அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும், அன்னாரது மகனும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கும், தி.மு.க.வினருக்கும் இப்பேரவை தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.
இதேபோல், 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை திருப்பரங்குன்றம் தொகுதியில் இருந்தும், 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை மதுரை (வடக்கு) தொகுதியில் இருந்தும் மற்றும் 2016-ம் ஆண்டு முதல் திருப்பரங்குன்றம் தொகுதியில் இருந்தும் தொடர்ந்து 3 முறை சட்டமன்றப் பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, சிறப்புறப் பணியாற்றியவரும், அ.தி.மு.க.வுக்கு விசுவாசமாக இருந்து செயல்படுபவர் என்று ஜெயலலிதாவால் பெருமையாகக் குறிப்பிடப்பட்டதோடு அவரின் நன்மதிப்பைப் பெற்றவரும், தனது தொகுதி மக்களுக்குத் தொண்டு செய்வதில் மிகுந்த அக்கறை காட்டியவரும், பழகுவதில் இனிய பண்பும், அனைவரிடத்தில் அன்பும் கொண்டவரும், கட்சி பாகுபாடின்றி பழகி அனைவரின் அன்பையும், பாராட்டுதலையும் பெற்றவரும், 15-வது சட்டமன்றப் பேரவையின் உறுப்பினருமான ஏ.கே.போஸ் 2-8-2018 அன்று மறைவுற்ற செய்தி அறிந்து இப்பேரவை அதிர்ச்சியும், ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது. அன்னாரது மறைவால் அவரை இழந்து வருந்தும் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் இப்பேரவை தெரிவித்துக்கொள்கிறது. இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

அவரைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் முகமது அபுபக்கர், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை உறுப்பினர் தனியரசு, மனிதநேய ஜனநாயக கட்சி உறுப்பினர் தமிமுன் அன்சாரி ஆகியோர் இரங்கல் தெரிவித்து, கருணாநிதிக்கு புகழாரம் சூட்டி பேசினார்கள்.

அதன்பின்னர், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் ப.தனபால் ஆகியோர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அவரது சேவையை நினைவு கூர்ந்து உரையாற்றினார்கள். தொடர்ந்து, அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடங்கள் அஞ்சலி செலுத்தினார்கள். அத்துடன் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற இருக்கிறது.

Leave a comment