பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 14 ஆயிரத்து 263 சிறப்பு பஸ்கள் இயக்கம்

237 0

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 14 ஆயிரத்து 263 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் பயணம் செய்ய 9-ந்தேதி முதல் முன்பதிவு செய்யலாம்.

பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரையில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பஸ் நிலையம் (கோயம்பேடு), மாதவரம் பஸ் நிலையம், கே.கே.நகர் பஸ் நிலையம், பூந்தமல்லி பஸ் நிலையம், தாம்பரம் சானிடோரியம் (மெப்ஸ்) மற்றும் தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து 14 ஆயிரத்து 263 பஸ்கள் (தினசரி பஸ்கள் உள்பட) இயக்கப்படும். பிற ஊர்களில் இருந்து 10 ஆயிரத்து 445 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

பொங்கல் பண்டிகை முடிந்து பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வருவதற்காக 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையில் 3 ஆயிரத்து 776 சிறப்பு பஸ்களும், பல்வேறு பகுதிகளுக்கு 7 ஆயிரத்து 841 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும்.

பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு பஸ் நிலையத்தில் 26-ம், தாம்பரம் சானிடோரியத்தில் (மெப்ஸ்) 2-ம், பூந்தமல்லியில் 1-ம், மாதவரத்தில் 1-ம் என மொத்தம் 30 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்படும். 9-ந்தேதி முதல் இந்த முன்பதிவு மையங்கள் செயல்படும்.

சிறப்பு பஸ்கள் 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரையில் கோயம்பேட்டில் இருந்து தாம்பரம், பெருங்களத்தூர் செல்லாமல் மதுரவாயல், பூந்தமல்லி, நசரத்பேட்டை, வெளிசுற்றுச் சாலை வழியாக வண்டலூர் செல்லும். தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் இருந்து பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த பயணிகள், ஊரப்பாக்கம் (கிளாம்பாக்கம்) தற்காலிக பஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டும்.

மேற்கண்ட நாட்களில் கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து, திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர் வழியாக செல்லலாம். கனரக வாகனங்கள் மதியம் 2 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை மதுரவாயல் முதல் செங்கல்பட்டு வரை உள்ள வழித் தடங்களை தவிர்க்க வேண்டும்.

தற்காலிக பஸ் நிலையங்கள் மற்றும் பஸ்களின் இயக்க விவரம்:-

* மாதவரம் புதிய பஸ் நிலையம் – ஆந்திரா மார்க்கமாக செல்லும் பஸ்கள்.

* கே.கே.நகர் பஸ் நிலையம் – கிழக்கு கடற்கரை சாலை(ஈ.சி.ஆர்) மார்க்கமாக செல்லும் புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பஸ்கள்.

* தாம்பரம் சானிடோரியம் (மெப்ஸ்) – விக்கிரவாண்டி, பண்ருட்டி, வழியாக கும்பகோணம், தஞ்சை செல்லும் பஸ்கள்.

* தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிறுத்தம் – திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பஸ்கள்.

* பூந்தமல்லி பஸ் நிலையம் – வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர் காஞ்சீபுரம், செய்யாறு மற்றும் ஓசூர் செல்லும் பஸ்கள்.

* கோயம்பேடு – மதுரை, மயிலாடுதுறை, நாகை, வேளாங்கண்ணி, திருச்சி, நெல்லை, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், திண்டிவனம், திருவண்ணாமலை, விழுப்புரம், பண்ருட்டி, நெய்வேலி, கள்ளக்குறிச்சி, கடலூர், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோவை, எர்ணாகுளம் மற்றும் பெங்களூரு. 

Leave a comment