இஸ்லாமாபாத்தில் சார்க் மாநாடு நடக்குமா? – பாகிஸ்தான் விளக்கம்

313 0

201609282241330327_saarc-summit-still-on-says-pakistan_secvpf-1இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள சார்க் மாநாடு ரத்து செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், மாநாடு குறித்து பாகிஸ்தான் விளக்கம் அளித்துள்ளது.சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் 19-வது மாநாட்டை வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சார்க் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது. இந்த தகவல் நேபாளத்தில் உள்ள சார்க் அமைப்பின் தலைமையகத்திற்கு இந்திய அரசின் சார்பில் கடிதம் மூலமாக தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவை தொடர்ந்து, பூடான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளும் இஸ்லாமாபாத் சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

மொத்தமுள்ள 8 நாடுகளில் இந்தியா உள்ளிட்ட 4 நாடுகள் புறக்கணித்ததால் சார்க் மாநாடு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சார்க் மாநாட்டின் நடைமுறைப்படி அமைப்பில் உள்ள ஒரு நாடு கலந்து கொள்ளவில்லை என்றாலும், நிகழ்வு தள்ளி வைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும்.

இருப்பினும், நியூயாக்கில் இருக்கும் சார்க் அமைப்பின் பொதுச் செயலாளர் பகதூர் தபா நேபாளம் திரும்பியதும் அதிகாரப்பூர்வ முடிவு இரு தினங்களில் எடுக்கப்படும் என்று தெரிகிறது.  இந்நிலையில், இஸ்லாமாபாத் சார்க் மாநாடு நடைபெற இன்னும் வாய்ப்புள்ளது என்று பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் நாபீஸ் ஜகாரியா கூறியதாவது:- சார்க் மாநாட்டினை நவம்பர் மாதம் பாகிஸ்தான் நடத்தும். இந்தியா சார்க் மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என்ற செய்தியை அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் டுவிட்டர் பக்கத்தில் பார்த்து தெரிந்து கொண்டோம்.

இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது. இருப்பினும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் பெறப்படவில்லை. சார்க் மாநாட்டில உள்ள நாடுகளின் பகுதிகளில் அமைதியை நிலைநாட்டவே பாகிஸ்தான் உறுதி பூண்டுள்ளது.இவ்வாறு தெரிவித்துள்ளார்.