1990 இற்கு முன்னர் இருந்த நிலைக்கு மயிலிட்டி மக்களை உயர்த்துவோம்! யாழ்.அரசாங்க அதிபர் உறுதி.

10765 0

1990 ஆம் ஆண்டு இடப்பெயர்விற்கு முன்னர் இந்த மண்ணில் எவ்வாறு இருந்தீர்களோ அந்நிலையை ஏற்படுத்தித் தருவோம் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

வலி வடக்கு பிரதேசத்தின் மயிலிட்டி வடக்கு பலநோக்கு மண்டபமாக அமைக்கப்பட்டிருக்கும் கிராமியச் செயலக திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வீடுகள் இருந்த அடையாளமே தெரியாதவாறு முற்றிலும் அழிவடைந்த நிலையிலேயே மயிலிட்டி பகுதி விடுவிக்கப்பட்டுள்ளது. ஆகவே இக்கிராமத்தை புதிதாகவே உருவாக்க வேண்டிய தேவையுள்ளது. இடப்பெயர்விற்கு முன்னதாக நீங்கள் எவ்வாறு இருந்தீர்களோ அந்நிலைக்கு உங்களை கொண்டுவருவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பிரதம விருந்தினர் உரையில் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

நோர்வே அரசின் அனுசரணையுடன் யு.என்.டி.பி. நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் பலநோக்கு மண்டபத் திறப்புவிழாவும் மண்டப கையளிப்பு நிகழ்வும் இன்று வியாழன் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றுள்ளது. பிரதம விருந்தினராக வருகைதந்து பலநோக்கு மண்டபத்திற்கான பெயர் பலகையை திரை நீக்கம் செய்து வைத்ததுடன் மயிலிட்டி வடக்கு J/251 கிராமிய அபிவிருத்தி அமைப்பிடம் உத்தியோகபூர்வமாக கையளித்திருந்தார் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள்.

இந்நிகழ்விற்கு வருகை தந்திருந்த சிறப்பு அதிதிகளுக்கு மாலை அணிவித்து ஆராத்தி எடுத்து வரவேற்பு வழங்கப்பட்டதையடுத்து பெயர்பலகை திரை நீக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து பிரதம, சிறப்பு, கௌரவ விருந்தினர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் மங்கல விளக்கேற்றி வைத்தனர். ஊறணி பங்குத்தந்தை அவர்களின் ஆசியுரையினைத் தொடர்ந்து மயிலிட்டி வடக்கு J/251 கிராமிய அபிவிருத்தி அமைப்பின் தலைவர் திரு. ஐயம்பிள்ளை உருத்திரமூர்த்தி அவர்களது தலைமை உரை இடம்பெற்றது. தொடர்ந்து பிரம விருந்தினர் உரை, சிறப்பு விருந்தினர் உரை, கௌர விருந்தினர் உரைகள் இடம்பெற்று நன்றி உரையுடன் நிறைவுபெற்றது.

பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு நா.வேதநாயகம் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக தெல்லிப்பளை பிரதேச செயலாளர் திரு ச.சிவசிறி, வலிகாமம் வடக்கு பிரதேசசபை தவிசாளர் திரு சோ.சுகிர்தன் மற்றும் ஊறணி பங்குத்தந்தை தேவராஜன் பாதர் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக யு.என்.டி.பி. நிறுவனத்தின் பிராந்திய திட்ட இணைப்பாளர் திரு த.தனக்குமார், யு.என்.டி.பி. நிறுவனத்தின் வெளிக்கள திட்ட நிபுனர் திரு இ.சர்வானந்தா மற்றும் கடற்றொழில் பரிசோதகர் திரு ஜெயசீலன் ஆகியோருடன் மயிலிட்டி வடக்கு கிராம சேவையாளர் பிரிவு J/251 கிராம அலுவலர் திரு க.துவாரகன், அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு க.வீரசிவகரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்த சிறப்பு அதிதிகளுக்கு மயிலிட்டி வடக்கு J/251 கிராம அபிவிருத்தி அமைப்பின் சார்பில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் நினைவுப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment