இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலில் போட்டியிடுவதில்லை

429 0

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கான தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். 

இன்று (17) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்காக நான்கு பேர் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

அதன்படி முன்னாள் தலைவர்களான திலங்க சுமத்திபால, ஜயந்த தர்மதாச, முன்னாள் செயலாளரும் தற்போதைய உபதலைவருமான மொஹன் டி சில்வா மற்றும் முன்னாள் செயலாளர் நிஷாந்த ரணதுங்க ஆகியோர் இவ்வாறு தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

அத்துடன் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு திலங்க சுமதிபால போட்டியிடுவதற்காக வழங்கப்பட்டுள்ள பெயர் பட்டியலை நிராகரிக்க உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு நிஷாந்த ரணதுங்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனுவில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கான தேர்தலில் வேட்பாளருக்காக திலங்க சுமதிபாலவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை சட்டத்திற்கு முரணானது என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் திலங்க சுமதிபால குறித்த பதவிக்காக போட்டியிட்டால் விளையாட்டுச் சட்டத்தின் விதிகள் மீறப்படும் என மனுதாரர் குறித்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையிலேயே எதிர்வரும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கான தேர்தலில் தான் போட்டியிடுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment