சதித்திட்டங்கள் காரணமாக ஜனாதிபதி மீண்டும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க தள்ளப்பட்டார் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

ஐக்கிய தேசியக் கட்சியின் லிபரல்வாத கொள்கையை தடுத்து நிறுத்தவே மஹிந்த ராஜபக்ஷவை, ஜனாதிபதி பிரதமராக நியமித்தார். என்றாலும் நாட்டை பாதுகாக்க தொடர்ந்தும் நாங்கள்  ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவோம்.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்து ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கும் எதிராக அணிதிரள மக்கள் எங்களுடன் கைகோர்த்துக்கொள்ளவேண்டும்.

ஜனாதிபதியும் ஐக்கிய தேசிய கட்சிக்கு நினைத்த பிரகாரம் ஆட்சியை கொண்டுசெல்ல இடமளிக்கமாட்டார்.

அதனால் ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு நாங்கள் தொடர்ந்தும் ஆதரவளிக்க தயாராக இருக்கின்றோம். ஜனாதிபதியின் ஜனநாயக நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க நாங்கள் தொடர்ந்து ஜனாதிபதியுடனே இருப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.