அரசியலமைப்பு சட்டத்தை மீறுகிறார் மோடி

247 0

கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேகதாது அணை நோக்கி 1-ந்தேதி விவசாயிகள் பேரணி நடைபெறும் என பிஆர் பாண்டியன்.

தமிழக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் மாநில நிர்வாககள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடக அரசு மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு வரைவு திட்டம் மற்றும் ஆய்வு திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு மத்திய அரசு கொடுத்த அனுமதியை திரும்ப பெற வேண்டும். கர்நாடகா முதல்வர் சட்டத்துக்கு புறம்பாக மேகதாது அணை கட்டி தமிழகத்திற்குதான் தண்ணீர் தரப்போகிறோம் என்றும், அதற்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கூறுவது மிக மோசடியானது. தமிழகத்தை அழிக்கும் நோக்கம் கொண்டது.

எனவே உள்நோக்கத்துடன் மேகதாது அணை கட்டுவதை கர்நாடகா அரசு கைவிட வேண்டும். தமிழக விவசாயிகள் நலனில் அக்கறை இருந்தால் கர்நாடகா முதல்வர் ராசி மணலில் அணை கட்டி, கடலில் கலக்கும் தண்ணீரை தமிழகம் பயன்படுத்த அவர் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மத்திய அரசு ராசி மணலில் அணை கட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும்.

மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கமாட்டோம். அதே நேரம் வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க கொடுத்துள்ள அனுமதியை தடை செய்யமாட்டோம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் கூற்று முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. இதனால் கோர்ட்டு தீர்ப்பு மீது தமிழக விவசாயிகளுக்கு சந்தேகம் இருக்கிறது. இது இந்தியாவின் ஒற்றுமைக்கு பேராபத்தை ஏற்படுத்தும்.

காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவில் லாப நோக்கத்துடனும் தமிழகத்தை அழிக்கும் நோக்கத்துடனும் மத்திய அரசு செயல்படுவது ஏற்கக்கூடியது இல்லை. பிரதமர் மோடி கர்நாடகாவில் ஓட்டு வாங்குவதற்காக மறைமுக சூழ்ச்சியில் ஈடுபடுகிறார். அரசியல் அமைப்பு சட்டத்தையே பிரதமர் மீறுகிறார்.

எனவே ஜனவரி1-ந்தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து மேகதாது நோக்கி, பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாக செல்ல உள்ளோம். மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஜனவரி 1-ந்தேதியை துக்க நாளாக அறிவித்து தமிழகத்தில் விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், அரசு அதிகாரிகள் புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பல கிராமங்களில் இன்னும் மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. பாசன கிணறுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. வருகிற 18-ந்தேதி கர்நாடகா முதல்வர் குமார சாமி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருகிறார். அவரை அனுமதிக்க மாட்டோம், திருப்பி அனுப்புவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment