ஊத்தங்கரை அருகே நாட்டு துப்பாக்கியால் டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேரை சுட்டு ரூ.3½ லட்சம் கொள்ளை

262 0

ஊத்தங்கரை அருகே நாட்டு துப்பாக்கியால் டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேரை சுட்டு ரூ.3½ லட்சம் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காட்டேரி கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியையொட்டி அரசு மதுபான டாஸ்மாக் கடை அமைந்துள்ளது.

இந்த டாஸ்மாக் கடையில் தருமபுரி மாவட்டம் புட்டிரெட்டிப் பட்டியைச் சேர்ந்த முருகன் (வயது 50) என்பவர் விற்பனையாளராகவும், அரூர் நம்பிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (42) என்பவர் உதவி விற்பனையாளராகவும் பணி புரிந்து வருகின்றனர்.

இவர்கள் நேற்று இரவு மதுபான கடையில் கணக்கு சரிபார்த்து விட்டு 10.45 மணியளவில் கடையை பூட்டினர்.

அப்போது விற்பனை செய்த ரூ.3½ லட்சத்தை எடுத்து கொண்டு 2 பேரும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி வந்தனர். வண்டியை ஆனந்தன் ஓட்டி வந்தார்.

அவர்கள் 2 பேரும் ஊத்தங்கரையில் உள்ள தனியார் கல்லூரி அருகே வந்தபோது பின்னால் மர்ம நபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வேகமாக துரத்தி வந்ததை கண்டனர். உடனே ஆனந்தன் வண்டியை வேகமாக ஓட்டினார். அப்போது மர்ம நபர்கள் டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேரையும் வழிமறித்தனர்.

அவர்கள் முருகனையும், ஆனந்தனையும் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் தாக்கி பணத்தை முழுவதும் கொடுக்குமாறு கூறினர். அவர்களிடம் இருந்து பணத்தை பறிக்கும் முயற்சியில் மர்ம நபர்கள் ஈடுபட்டதால் முருகன் பணப்பையை தராமல் தடுக்க முயற்சி செய்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் நாட்டு துப்பாக்கியால் ஆனந்தனையும், முருகனையும் சுட்டனர். பின்னர் அவர்கள் கொண்டு வந்த ரூ.3½ லட்சத்தையும் எடுத்து சென்றனர்.

இதில் முருகனுக்கு காதில் குண்டு பாய்ந்து காயம் அடைந்தார். ஆனந்தனுக்கு பின் முதுகு பகுதியில் குண்டு பாய்ந்தது. இதனால் இருவரும் வலியால் அலறி துடித்தனர். உடனே முருகன் தனது செல்போனில் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார். அதற்குள் அக்கம்பக்கத்தினர் அந்த பகுதியில் திரண்டனர். நடந்த சம்பவத்தை பற்றி அவர்களிடம் 2பேரும் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் வந்ததும் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக முருகனை தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கும், பின்முதுகு பகுதியில் குண்டு பாய்ந்ததால் அதனை அகற்ற ஆனந்தனை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேரை துப்பாக்கியால் சுட்டு ரூ.3½ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a comment