சத்தியமங்கலம் வனப்பகுதியில் யானை தூக்கி வீசியதில் விவசாயி பரிதாப சாவு

6718 1,225

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் வனப்பகுதி தாளவாடி அருகே யானை தூக்கி வீசியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் வனப்பகுதி தாளவாடி அருகே உள்ள மாதள்ளி என்ற ஊரை சேர்ந்தவர் பிரபுசாமி (வயது 60) விவசாயி. இவர் அந்த பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தார். யானை மற்றும் காட்டு பன்றிகள் தொல்லை இருப்பதால் தினமும் இரவு தனது தோட்டத்துக்கு பாதுகாப்பு பணிக்காக செல்வார். அங்கேயே தூங்கிக்கொள்வார்.

நேற்று இரவும் இதேபோல் பிரபுசாமி தனது தோட்டத்துக்கு காவல் பணிக்காக சென்றார். இரவில் தகர டப்பாவால் அடித்தப்படி யானை மற்றும் காட்டு பன்றிகள் உள்ளே நுழையாதபடி சத்தம் போட்டப்படி தனது தோட்டத்துக்குள் சுற்றி வந்தார். அப்போது அங்கு ஏற்கனவே புகுந்திருந்த ஒரு யானை பிரபுசாமியை தூக்கி வீசியது. இதில் அவரது தலை மற்றும் வயிற்று பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. மேலும் தூக்கி வீசியதில் அவரது காலும் முறிந்து படுகாயத்துடன் கிடந்தார்.

அவர் போட்ட சத்தத்தில் பக்கத்து விவசாய தோட்டத்தில் காவல் பணியில் இருந்த மற்ற விவசாயிகள் ஓடிவந்தனர். யானை காட்டுக்குள் நுழைந்ததும் தோட்டத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு படுகாயத்துடன் சத்தம் போட்டப்படி கிடந்த அவரை கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே விவசாயி பிரபுசாமி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

There are 1,225 comments