இனவாதத்திற்கு உரமேற்றுவதற்காக, மட்டு வவுணதீவு சம்பவத்தை முன்னிறுத்துவதானது ஐய்யப்பாட்டை உறுதிசெய்கிறது

304 0

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த இரு காவலர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை முன்னிறுத்தியதாக சிங்களத் தரப்பினால் மேற்கொள்ளப்பட்டுவரும் இனவாதத்தை உரமேற்றும் செயற்பாடுகளானது இதற்காகவே அச்சம்பவம் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற ஐய்யப்பாட்டினை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

மாவீரர் தின நினைவேந்தல் மூலம் தமிழ்த் தேசியம் எழுச்சி பெற்றுள்ள பின்னணியில் எதேச்சதிகார அடக்குமுறைகள் கால் தூசாக பறக்க விடப்பட்டுள்ளதை ஜீரணிக்க முடியாத சக்திகளினாலே வவுண தீவு அசம்பாவிதம் அரங்கேற்றப்பட்டிருக்கலாம் என்ற ஐய்யம் எமக்குண்டு. இச்சம்பவம் இடம்பெற்று அடுத்த நாளே அதனுடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டி, முன்னாள் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் மேலும் ஒருவர் தேடப்பட்ட நிலையில் அவர் சிறிலங்கா காற்துறையிடம் சரணடைந்திருந்துள்ளார், கைது நடவடிக்கை தற்போதுவரை தொடர்வதும் அவ் ஐய்யப்பாட்டினை உறுதிசெய்வதாகவே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களுக்கு எதிரான இனவழிப்பு யுத்தம் முழு வீச்சோடு முன்னெடுக்கப்பட்டு வந்த காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தில் நிலை நிறுத்தப்பட்டிருந்த ஒன்றரை இலட்சத்திற்கு மேற்பட்ட சிறிலங்கா இராணுவத்தினர் அதே நிலையில் தற்போதும் தக்கவைக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையிலும் கூட, ஆவா குழு போன்ற சட்டவிரோத ஆயுதக்குழுக்கள் முழு சுதந்திரத்துடன் செயற்பட்டு வருகின்றன. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதுடன், தாராளமான விநியோகமும் தங்கு, தடையேதுமற்று நடந்தேறிவருகின்றது.

மேற்குறித்த விடயங்களுடன் தொடர்புடையவர்களும், அதற்கான வழித்தடங்களும் தௌ;ளத்தெளிவாகத் தெரிந்திருந்தும் கூட இதுவரை அவற்றைக் கட்டுப்படுத்தவோ, தடுத்து நிறுத்தவோ ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் ஏதும் சட்டம்-ஒழுங்கிற்கு பொறுப்பான சிறிலங்கா காவல்துறையினராலோ அல்லது இராணுவத்தினராலோ எடுக்கப்பட்டிருக்கவில்லை. இந்நிலையே கிழக்கு மாகாணத்திலும் தொடர்கின்றது. இவ்வாறு இருக்கையில் வவுணதீவு சம்பவம் இடம்பெற்ற கையோடு அதனுடன் தொடர்புடையதாகக் கூறி நடந்தேறியிருக்கும் கைது, சரண் நடவடிக்கைகளே ஐய்யப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தை பூதாகரப்படுத்தி நடப்பு அரசியல் குழப்பங்களை திசைதிருப்பும் உத்தியாக முன்னாள் போராளிகள் சிக்க வைக்கப்பட்டிருக்கலாம். அல்லது தமது கட்டுப்பாட்டில் உள்ள சிலரை வைத்தே மகிந்த ராஜபக்சே தரப்பு இராணுவத்தினரோ, புலனாய்வாளர்களோ அல்லது அவர்களோடு இணைந்து செயற்பட்டுவரும் துணை ஆயுதக் குழுவினரோ இச்சம்பவத்தை திட்டமிட்டே ஏற்படுத்தியிருக்கலாம்.

இவை எதுவாக இருந்தாலும் இதன் மூலம் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூப்பாடு போட்டு, மகிந்த ராஜபக்சே ஒருவாரல் தான் இந்நிலையில் இருந்து நாட்டை பாதுகாக்க முடியும் என்றுகூறி சிங்கள பௌத்த பேரினவாத அடிப்படையில் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கும் அப்பாவிச் சிங்கள மக்களது ஆதரவினை தம்வசமாக்குவதே இந்தச் சதியின் முதன்மைக் காரணமாக இருக்கலாம். அதனை உறுதி செய்வதாகவே இச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அத்தரப்பினர் வெளியிட்டுவரும் கருத்துகள் அமைந்துள்ளது.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் பறிக்கும் திட்டமாக தமிழர்களை மீண்டும் இராணுவ அச்சுறுத்தலுக்கு மத்தியில் முடக்கும் நோக்கிலும் இச்சதி திட்டமிடப்பட்டிருக்கலாம் என்பதனையே யாழ் மாவட்ட இராணுவத் தளபதியின் மிரட்டலும் சிறிலங்கா இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்காவின் எச்சரிக்கையும் உறுதிசெய்வதாக அமைந்துள்ளது.

மீண்டும் இராணுவத்தை வீதியில் இறக்கி சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளும் சூழல் ஏற்படும் என முன்னரும், புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கும் முன்னாள் போராளிகளின் முழு விபரமும் தமது கையில் இருப்பதாக பின்னரும் மிரட்டல் பாணியில் கருத்துரைப்பது அவர்களது சிங்கள பௌத்த பேரினவாத மேலாதிக்க மனோன்நிலையின் வெளிப்பாடாகும். சந்தர்ப்பம் கிடைக்கும் போதோ அல்லது சந்தர்ப்பத்தை திட்டமிட்டு ஏற்படுத்தி அதன் அடிப்படையிலோ தமிழர்களை அடக்கியாண்டு அச்சுறுத்திவருவது காலா காலமாக நடந்தேறிவரும் அடக்குமுறையின் வெளிப்பாடாக அமைந்து வருகின்றது.

ஆயுத மௌனிப்பின் பின்னரான, வவுண தீவுச் சம்பவம் நடந்தேறியது வரையான காலப்பகுதியில் இது போன்ற ஆயுத வழிமுறையில் தமது எதிர்ப்புணர்வினை வெளிப்படுத்துவதற்கு தமிழர் தரப்பு முற்படாது அமைதிகாத்து வரும் நிலையில் இவ்வாறான சம்பவங்கள் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டவை என்பதை உலக நாடுகள் நன்கறியும். ஆகவே காலத்திற்கு காலம் இவ்வாறான திசை திருப்புதல் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதை விடுத்து தமிழ் மக்களது தேசிய அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் நிரந்தரத் தீர்வினைக் காண்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள சர்வதேசமானது சிறிலங்கா ஆட்சியாளர்கள் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க முன்வர வேண்டும் என வலியுறுத்திக்கொள்கின்றோம்.
‘சுயநிர்ணய உரிமை ஈழத்தமிழர்களின் பிறப்புரிமை’

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’

அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Leave a comment