‘இந்தியரை விடுதலை செய்து, ஊருக்கு அனுப்ப வேண்டும்’ – இம்ரான்கான் அரசுக்கு கோர்ட்டு அதிரடி உத்தரவு

264 0

பாகிஸ்தான் சிறையில் வாடும் இந்தியரை விடுதலை செய்து, ஒரு மாத காலத்தில் ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று இம்ரான்கான் அரசுக்கு அங்குள்ள கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. 

ஹமீத் நிகல் அன்சாரி (வயது 33) என்ற இந்தியர், பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் உள்ள மத்திய சிறையில் தண்டனை கைதியாக இருந்து வருகிறார். இவரது பூர்வீகம், மும்பை ஆகும்.

இவர் ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் 2012-ம் ஆண்டு சட்ட விரோதமாக நுழைந்தார் என்றும், அவர் பாகிஸ்தானின் போலி அடையாள அட்டையுடன் காணப்பட்டார் என்றும் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

அவர் சமூக வலைத்தளம் ஒன்றின் மூலம் அறிமுகமான தோழியை சந்திப்பதற்காகத்தான் பாகிஸ்தான் சென்றதாக கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் மீது அங்குள்ள ராணுவ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில் அன்சாரிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து 2015-ம் ஆண்டு ராணுவ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அதைத் தொடர்ந்து அவர் பெஷாவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இவரது தண்டனைக்காலம் இன்று (15-ந் தேதி) முடிகிறது. ஆனால் அவரது விடுதலைக்கு அங்குள்ள இம்ரான்கான் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து அன்சாரி தரப்பில் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில், மூத்த வக்கீல் காஜி முகமது அன்வர் வழக்கு தொடுத்தார்.

அந்த வழக்கில், தண்டனைக்காலம் முடிவடையும் நிலையில், தன் கட்சிக்காரரை விடுதலை செய்து சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இது தொடர்பாக கோர்ட்டு முறையான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் முறையிடப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதிகள் ரூகுல் அமீன், கலந்தர் அலிகான் ஆகியோர் நேற்று முன்தினம் விசாரித்தனர்.

அப்போது அன்சாரி தரப்பில் மூத்த வக்கீல் காஜி முகமது அன்வர் ஆஜராகி, “அன்சாரியின் தண்டனைக்காலம் டிசம்பர் 15-ந் தேதி (இன்று) முடிகிறது. ஆனால் அவரை விடுதலை செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக உள்துறை அமைச்சகமும், சிறை அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனமாக உள்ளனர். எனவே அவரை 16-ந் தேதி காலையில் விடுதலை செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க உத்தரவிட வேண்டும்” என வாதாடினார்.

அப்போது இம்ரான்கான் அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்டார்னி ஜெனரல், “அவரை விடுதலை செய்வதற்கான ஆவணங்கள் இன்னும் தயார் ஆகவில்லை” என கூறினார்.

உடனே நீதிபதி கலந்தர் அலிகான், “ தண்டனைக்காலம் முடிந்த பின்னர் எப்படி ஒருவரை தொடர்ந்து சிறையில் வைத்திருக்க முடியும்? 2 நாளில் அவரது தண்டனை முடிகிறது. ஆனால் அவரை விடுதலை செய்து சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது ஆச்சரியம் அளிக்கிறது” என கருத்து தெரிவித்தார்.

உள்துறை அமைச்சகம் சார்பில் ஆஜராகி இருந்த அதிகாரி, “ வரை விடுதலை செய்வதற்கான சட்ட ஆவணங்கள் தயார் ஆகிற வரையில் ஒரு மாத காலம் சிறையில் வைத்திருக்க முடியும்” என நீதிபதிகளிடம் குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து நீதிபதிகள், “அன்சாரியை ஒரு மாத காலத்திற்குள் விடுதலை செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.#

Leave a comment