மாதவரம் மீன்வள பல்கலைக்கழகத்தில் நோய் கண்காணிப்பு ஆய்வக கட்டிடம் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்!

257 0

மாதவரம் மீன்வள பல்கலைக்கழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நோய் கண்காணிப்பு ஆய்வக கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

நபார்டு நிதியுதவி திட்டத்தின் கீழ் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களையும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்கீழ் திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மொத்தம் ரூ.142.94 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களையும் சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

திருச்சி மாவட்டம் சென்னை – திருச்சி – திண்டுக்கல் – சாலையில் கோரையார் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் உள்பட ரூ.484.40 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பாலங்களையும், மேம்படுத்தப்பட்ட சாலைகளையும் முதல்-அமைச்சர் திறந்துவைத்தார்.

மேலும், டி.என்.பி.எஸ்.சி. மூலம் பள்ளிக்கல்வி இயக்ககத்தின் அமைச்சு பணிக்கு 62 உதவியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் 7 பேருக்கு பணிநியமன ஆணைகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

இதேபோல், நெடுஞ்சாலை துறைக்காக தமிழ்நாடு பொறியியல் பணி தொகுதியின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 164 உதவி பொறியாளர்கள் மற்றும் தமிழ்நாடு அமைச்சு பணி தொகுதியின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 222 உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் அடையாளமாக 4 உதவி பொறியாளர்கள் மற்றும் 3 உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் செயலாக்கப்படும் சென்னை – கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தை செயல்படுத்தவும், கண்காணிக்கவும், கள ஆய்வு மேற்கொள்ளவும், முதல்கட்டமாக ஒரு கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்ட 26 வாகனங்களை திட்ட செயலாக்க அதிகாரிகளுக்கு வழங்கும் அடையாளமாக 5 அதிகாரிகளுக்கு வாகனங்களுக்கான சாவிகளை முதல்-அமைச்சர் வழங்கினார்.

மேலும் சென்னை – கன்னியாகுமரி தொழிற்தட திட்டம் குறித்த விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளவும், துறை அதிகாரிகள் திட்ட செயலாக்கத்தை கண்காணிக்க ஏதுவாகவும், சென்னை – கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்திற்கான http://www.ckicp.tnhighways.gov.in என்ற வலைதளத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

மேலும் வேளாண்மை துறை சார்பில் தயாரிக்கப்பட்ட, தமிழ்நாடு உணவு பதப்படுத்தும் கொள்கை – 2018 என்ற புத்தகத்தை எடப்பாடி பழனிசாமி வெளியிட வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு பெற்றுக்கொண்டார்.

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சென்னை, மாதவரம் மீன்வள பல்கலைக்கழக வளாகத்தில், தமிழ்நாடு புதுமை தொடக்க திட்டத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள நோய் அறிதல் ஆய்வக கட்டிடம் மற்றும் வேளாண் அபிவிருத்தி திட்ட நிதியுதவி மூலம் கட்டப்பட்ட நோய் கண்காணிப்பு ஆய்வக கட்டிடம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

மேலும், பால்வளத்துறை சார்பில் திருவள்ளூரில் 3,757 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள துணை பதிவாளர் (பால் வளம்) அலுவலக கட்டிடம் மற்றும் சென்னை நுங்கம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள அதிநவீன ஆவின் பாலகம் ஆகியவற்றை எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

மேற்கண்ட தகவல்கள் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment