கிராம நிர்வாக அதிகாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – வைகோ

268 0

கிராம நிர்வாக அதிகாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் பணிபுரியும் ஏழாயிரத்துக்கு மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 28-ம் தேதி முதல் போராடி வருகின்றனர். மூன்று கட்டங்களாக அறிவிக்கப்பட்ட போராட்டத்தில் டிசம்பர் 10-ந் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்திலும் இறங்கி உள்ளனர்.

கிராம நிர்வாக அலுவலர்களாக 50 விழுக்காடு பெண்கள் பணிபுரிவதால், அவரவர் சொந்த மாவட்டத்தில் பணிபுரிய மாவட்ட மாறுதல் கோரி வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலர்களின் அலுவலகங்களில் மின்வசதி, கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி வேண்டும் என்ற கோரிக்கையும் அரசால் நிறைவேற்ற முடியாதது அல்ல.

தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை கூடுதலாக கவனிக்க வேண்டி இருப்பதால், கிராம நிர்வாக அலுவலர்களின் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப் படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும்.

எனவே தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, கிராம நிர்வாக அலுவலர்களின் கோரிக்கைளை நிறைவேற்ற முன் வரவேண்டும். பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளர்.

Leave a comment