டெல்லியில் நாளை தமிழ்நாடு-கர்நாடகா அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

287 0

201609281206471088_cauvery-water-dispute-tamil-nadu-karnataka-officials-meeting_secvpfகாவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக தமிழ்நாடு-கர்நாடகா அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது.தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட உத்தரவிடக் கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது. ஆனால் கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்க மறுத்துவிட்டது.

கர்நாடகத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே தமிழகத்தில் தண்ணீர் வழங்க முடியாது என்று தொடர்ந்து கூறி வருகிறது. இது தொடர்பாக கர்நாடக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றி தனது நிலையை தெளிவுபடுத்தியது.

நேற்று இந்த வழக்கு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போதும் கர்நாடக அரசு வக்கீல் பாலிநாரிமன் தனது மாநிலத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும் எனவே தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க முடியாது என்றும் வாதிட்டார்.

வக்கீல்களின் காரசார விவாதத்துக்குப் பின் வழக்கு விசாரணையை வருகிற 30-ந்தேதிக்கு (வெள்ளிக் கிழமை) சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்து அதுவரை மேலும் 3 நாட்களுக்கு 6,000 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்று அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகியிடம் நீதிபதிகள் கேட்டனர். அதற்கு அவர் இந்த வி‌ஷயத்தில் கர்நாடக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சரியானது அல்ல, இரு மாநில அரசுகளும் சம்மதித்தால் அவற்றை அழைத்துப் பேச மத்திய அரசு தயாராக உள்ளது என்றார்.

இதையடுத்து இந்த பிரச்சினையில் கூட்டாட்சி தத்துவத்தை மதித்து மத்திய அரசு ஏற்பாடு செய்யும் கூட்டத்தில் இரு மாநில அரசு அதிகாரிகளும் பங்கேற்று சுமூகத்தீர்வு காண வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தமிழக- கர்நாடக அரசு அதிகாரிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.

டெல்லியில் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதில் இரு மாநில அரசு அதிகாரிகளும் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகளுக்கு மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

மத்திய நீர்வளத்துறை மந்திரி உமாபாரதி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமை செயலாளர் ராமமோகன்ராவ், பொதுப் பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

கர்நாடகம் சார்பில் முதல்- மந்திரி சித்தராமையா மற்றும் தலைமைச் செயலாளர், மாநில நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

முன்னதாக காவிரி விவகாரம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மற்றும் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் உள்ள தனது அறையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தேவையான உத்தரவுகள் பிறப்பித்தார்.

இதில் தலைமை செயலாளர் ராமமோகனராவ், அட்வகேட் ஜெனரல் ஆர். முத்துக்குமாரசாமி, அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், முதல்-அமைச்சரின் முதன்மை செயலாளர் வெங்கடராமன், செயலாளர் ஏ.ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாளை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிகாரிகள் இன்று மாலை 6 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்கள்.