‘181’ இலவச தொலைபேசி சேவை எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்

261 0

பெண்கள் பாதுகாப்புக்கான ‘181’ இலவச தொலைபேசி சேவையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார்.

சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் ரூ.51 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பில் காஞ்சீபுரம் மாவட்டம், தாம்பரம் சேவை இல்ல வளாகம் மற்றும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மைய கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து திறந்துவைத்தார்.

ஏழை பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தின்கீழ் 2018-19-ம் ஆண்டு பயனாளிகளுக்கு திருமண உதவி வழங்குதல் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு தொழில் தொடங்க நிதியுதவி வழங்கும் திட்டங்களையும் தொடங்கிவைத்தார்.
பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு துணைபுரியும் வகையில் ரூ.62 லட்சத்து 70 ஆயிரம் செலவில், 24 மணி நேரமும் செயல்படும் ‘181’ எனும் கட்டணமில்லா தொலைபேசி சேவையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார். வீடுகளிலோ, வெளியிடங்களிலோ, பணிபுரியும் இடங்களிலோ குடும்ப வன்முறை, பாலியல் துன்புறுத்தல் போன்ற கொடுமைகளால் பாதிக்கப்படும் பெண்கள் அவசர உதவி பெறும் வகையில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த சேவை மூலம் அவசர காலங்களில் போலீஸ், ஆஸ்பத்திரி, ஆம்புலன்ஸ், சட்ட உதவி போன்ற சேவைகளை பெண்கள் உடனடியாக பெறலாம். பெண்களுக்கான அரசின் நலத்திட்டங்கள், பாதிக்கப்பட்ட பெண்களுக்கான அரசின் உதவிகள் குறித்தும் அறியலாம். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வி.சரோஜா, பா.பென்ஜமின், க.பாண்டியராஜன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
வனம் மற்றும் வன உயிரின பாதுகாப்பு போன்றவற்றில் சிறப்பாக பணியாற்றும் வனத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் ‘முதல்-அமைச்சர் விருது’ வழங்கப்பட்டு வருகிறது.
2010-11-ம் ஆண்டில் 14 பேரும், 2013-14-ம் ஆண்டில் 12 பேரும் என மொத்தம் 26 வனத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முதல்-அமைச்சர் விருதுக்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்பட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
பொதுப்பணித்துறையின் கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத்துறை சார்பில் விழுப்புரம் மாவட்டம் தளவனூர், கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலம் கிராமம் ஆகியவற்றுக்கிடையே பெண்ணையாற்றின் குறுக்கே ரூ.25 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள அணைக்கட்டுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
பொதுப்பணித்துறை சார்பில் ரூ.96 கோடியே 7 லட்சம் மதிப்பீட்டிலான புதிய நீர்வள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.36 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டிலான நிறைவுற்ற திட்டப்பணிகளை அவர் திறந்துவைத்தார். அப்போது அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.
ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜனவரி 1-ந் தேதி முதல் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ உருவாக்கும் வகையில் பிளாஸ்டிக் தடையை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்த தலைமை செயலாளர் தலைமையில் 10 பேர் கொண்ட வழிகாட்டும் குழு அமைக்கப்பட்டுள்ளது. மண்டல ஒருங்கிணைப்பாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கான நடமாடும் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை எடப்பாடி பழனிசாமி நேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த வாகனம் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கே.சி.கருப்பணன் உள்பட அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில், “மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாரதியாரின் உருவசிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் அவரது உருவப்படத்துக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியளவில் மலர் தூவி மரியாதை செலுத்துவார்கள்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Leave a comment