யாழ் மாநகர பாதீட்டை ஏன் தோற்கடித்தோம் – முன்னணி உறுப்பினர் பார்த்தீபன் விளக்கம்

333 0

யாழ்ப்பாண மாநகர சபைக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட 45 உறுப்பினர்களுக்கும், அவர்களது செழுமைக்காகவும் பாதீட்டில் 47.37 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே

இவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

யாழ்ப்பாண மாநகர சபையின் 2019ஆம் ஆண்டுக்கான பாதீடு கடந்த 7ஆம் திகதியன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆளும் தரப்பால் சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டினை எதிர் தரப்பு எதிர்க்கவே வேண்டும் என்ற எழுதாத நியதியினை நாம் கடைப்பிடிக்கவில்லை.
இந்தப் பாதீட்டினை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஏன் எதிர்த்தது, ஏன் அதில் மாற்றங்களை கோரியது என்பதனை தெரிவிக்க வேண்டிய கடமைப்பாடு எமக்கு இருக்கின்றது.

பாதீட்டில் 2019ஆம் ஆண்டுக்கான யாழ்.மாநகர சபையின் சுய வருமானமாக 911.12 மில்லியன் ரூபா காட்டப்படிருந்தது. இந்த வருமானமானது மக்களின் வரிகள், வாடகைகள்,சேவைகளுக்கான கட்டணங்கள், உத்தரவுச் சீட்டுக்கள் மூலம் பெறப்படுவன.

இந்த வருமானத்தில் யாழ்ப்பாண மாநகர மக்களின் சோலை வரியினை உயர்த்துவதன் மூலம் பெறப்பட்ட 18.56 மில்லியன் ரூபா மேலதிக வருமானம், குடிதண்ணீர் கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம் பெறப்பட்ட 6.81 மில்லியன் ரூபா மேலதிக வருமானம் மற்றும் களியாட்ட வரி அதிகரிப்பின் மூலம் பெறப்பட்ட 3.02 மில்லியன் ரூபா மேலதிக வருமானம் என்பன உள்ளடக்கப்பட்டிருந்தன.


சோலை வரி தற்போதைய நிலையில் மக்களின் மீது வீண் வரிச்சுமை வேண்டாம் என்பதன் அடிப்படையில் அது நிராகரிக்கப்பட்டது. ஆனால் குடிதண்ணீரை மக்கள் அதன் பெறுமதி அறிந்து பயன்படுத்த வேண்டும் என்பதுடன் தரமான குடிதண்ணீரை வழங்க வேண்டும் என்பதன் அடிப்படையிலும் குடிதண்ணீர் கட்டண உயர்வு அங்கீகரிக்கப்பட்டது. அது போல் களியாட்ட வரி அதிகரிப்பும் அங்கீகரிக்கப்பட்டது.

2018 ஆம் ஆண்டு பாதீட்டில் கடை உரிமங்கள் மூலம் சபைக்கு 130 மில்லியன் ரூபா கிடைக்கும் என்றும் காட்டப்பட்டிருந்தது. ஆனால் அதன் மூலம் எந்த வருமானமும் சபைக்கு கிடைக்கவில்லை. அந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு பாதீட்டில் அது 485.26 மில்லியன் ரூபாவாக காட்டப்பட்டிருந்தது.; அதாவது 355.26 மில்லியன் ரூபா மேலதிக வருமானமாகக் காட்டப்பட்டிருந்தது. ஆனால் அதனை பெற்றுக் கொள்ளுவதில் உறுதிப்பாடு இல்லை.

அதே போல் விறாந்து கட்டணமாக 2018ஆம் ஆண்டு பாதீட்டில் 10 மில்லியன் ரூபா கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அதன் மூலம் எந்த வருமானமும் சபைக்கு கிடைக்கவில்லை. அது 2019ஆம் ஆண்டு பாதீட்டில் 9.26 மில்லியன் ரூபாவாக காணப்பட்டது. ஆனால் அதனை பெற்றுக் கொள்ளுவதில் உறுதிப்பாடு இல்லை.

ஆக 911.12 மில்லியன் ரூபா சுயவருமானம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்ட நிலையில் சோலை வரி உயர்வு மூலம் கிடைக்கும் மேலதிக வருமானமான 18.56 மில்லியன் ரூபாவும், கடை உரிமங்கள் மூலம் கிடைக்கும் மேலதிக வருமானமான 355.26 மில்லியன் ரூபாவும் விறாந்துக் கட்டணங்கள் மூலம் கிடைக்கும் வருமானமான 9.26 மில்லியன் ரூபாவும் என மொத்தமாக 383.08 மில்லியன் ரூபா மேலே கூறிய காரணங்களின் அடிப்படையில் நீக்கப்பட்டது.

இது மொத்த சுய வருமானத்தின் 42 வீதமாகும். இதன் அடிப்படையில் சபையின் சுய வருமானமாக 528.04 மில்லியன் ரூபாதான் உறுதியாக கிடைக்கும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

குறிப்பிடப்பட்ட வருமானத்தைவிட 42 சதவீதம் குறைவாக கிடைக்கும் நிலையில் 911.12 மில்லியன் ரூபாவுக்கு போடப்பட்ட செலவீட்டினை தற்போதைய உறுதி செய்யப்பட்ட வருமானமான 528.04 மில்லியன் ரூபாவுக்கு ஏற்றது போல் அமைத்து அதனை அடுத்த சபை அமர்வில் விவாதிக்கலாம் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஒரு சிலர் வருமானத்தை மாற்றியமைத்தது போல செலவையும் உடனடியாக மாற்றியமைக்க முடியாதா? என்று எம்மிடம் கேட்டனர். ஒரு வருமானம் கிடைக்குமா கிடைக்காதா? என்ற அடிப்படையில் அதை விவாதித்து தீர்மானித்து அவ் வருமானத்தை நீக்கலாம். ஆனால் இறுதி செய்யப்பட்ட தொகையினை எல்லாத்துறைகளுக்கும் அதன் தேவையறிந்து முக்கியத்துவம் அறிந்து பங்கீடு செய்வதோடு பங்கீடு செய்தவற்றில்; உடனடியாக மாற்றங்களை மேற்கொள்ள முடியாது என்பது அவர்களுக்கு புரியாதது விந்தையே.

செலவு மதிப்பீட்டில் சபையில் உள்ள மக்களால் தெரிவு செய்யப்பட்ட 45 உறுப்பினர்களுக்கும் அவர்களது செழுமைக்காக பல்வேறு பட்ட தேவைகளுக்காக இந்த பாதீட்டில் ஒதுக்கப்பட்ட தொகை 47.37 மில்லியன் ரூபா. இந்தச் செலவுத் தொகை குறிப்பிடப்பட்ட வருமானத்தின் 5.2 வீதமாகும்.

பையில் உள்ள மக்களால் தெரிவு செய்யப்பட்ட 45 உறுப்பினர்களுக்கும் அவர்களது செழுமைக்காக பல்வேறு பட்ட தேவைகளுக்காக இந்த பாதீட்டில் ஒதுக்கப்பட்ட தொகை 47.37 மில்லியன் ரூபா. இந்தச் செலவுத் தொகை குறிப்பிடப்பட்ட வருமானத்தின் 5.2 வீதமாகும்.

அதே நேரம் மக்களை நேரடியாக சென்றடையும் உள்கட்டுமான அபிவிருத்திகளான வீதி சீரமைப்பு, தெரு வெளிச்சம், கால்வாய் கட்டமைப்பு போன்றவற்றுக்காக பாதீட்டில் ஒதுக்கப்பட்ட தொகை 185 மில்லியன் ரூபா இது வருமானத்தின் 20.3 வீதமாகும்.
பாதீட்டில் உறுப்பினர்களின் கடல் கடந்த பயிற்சிகளுக்கு என 10 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. உறுப்பினர்கள் தங்களுடைய திறனை விருத்தி செய்யவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடம் இல்லை. ஆனால் தற்போது யாழ்ப்பாண மாநகரம் உள்ள நிலையில் மக்களின் மீது வீண் வரிச்சுமைகளைச் சுமத்தி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் நாம் வெளிநாட்டில் பயிற்சிக்கு செல்வது என்பது ஏற்புடையது அல்ல.

எமது திறனை நாமே விருத்தி செய்ய வேண்டும். அவ் விருத்தி மக்களின் வரிப்பணத்தில் இருந்து நாம் பெற்றதாக இருத்தல் விரும்பத்தக்கது அல்ல. நாம் வெளிநாடு சென்று பயிற்சி பெற்றே எமது வட்டாரகளை மேம்படுத்த வேண்டும் என்பதன் அடிப்படையில் யாரும் எமக்கு வாக்களிக்கவில்லை என்பது அடிப்படை.

ஆக கிடைக்க முடியாத வருமானங்களை நீக்கி , உறுப்பினர்களின் செழுமைக்கான வசதிகளைத் தவிர்த்து நிச்சயமாக உறுதி செய்யப்பட்ட வருமானத்திற்கு ஏற்றவகையில் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து மக்களின் வாழ்வாதார மற்றும் அவர்கள் வாழும் சுற்றாடலின் மேம்பாட்டுக்கு ஏற்றவகையில் ஒரு செலவு மதிப்பீட்டினை மீளத் தயாரித்து சபையில் சமர்ப்பிக்குமாறு கூறியது எவ்வகையில் தவறாகும் – என்றுள்ளது.

Leave a comment