கஜா புயல் நிவாரணத்துக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என்று உள்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், ‘கஜா’ புயல் பாதிப்பு குறித்து விளக்கவும், சேத மதிப்பு தொடர்பான விவரங்களை பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு தேவையான நிதியை பெற்று வருவதற்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். அவருடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் சென்றனர்.
இன்று காலை பிரதமர் மோடியை தமிழக முதல்வர் சந்திக்க உள்ள நிலையில், கஜா புயல் சேத விவரம் மற்றும் தேவைப்படும் நிவாரணம் தொடர்பான தமிழக அரசின் சார்பில் உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது.
அதில், கஜா புயல் நிவாரணத்துக்கு தமிழக அரசு 14 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டிருப்பதாகவும், இடைக்கால நிவாரணமாக 1500 கோடி ரூபாய் ஒதுக்கும்படி கோரிக்கை வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

