மைத்திரியால் காப்பாற்றப்பட்ட தரப்புகள்!

508 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம், நாட்டை நாளுக்கு நாள், அதள பாதாளத்தை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்றது.   

அரசியல் ஸ்திரத்தன்மை மாத்திரமல்ல, பொருளாதாரம், நிர்வாகம் போன்ற துறைகளிலும் முடக்கம் ஏற்பட்டிருக்கின்றது. வருட இறுதியில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் குழப்பத்தால், அடுத்த வருடத்துக்கான பாதீட்டுத் திட்டம் கேள்விக்குறியாகியுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்கும் வரை, நாடாளுமன்றத்தில் எந்தவொரு சிறிய விடயத்தையும் மைத்திரியால் நிறைவேற்ற முடியாது. அதைப் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுமதிக்கமாட்டார்கள்.

அப்படியான நிலையில், அடுத்த ஆண்டுக்கான நிதியை எங்கிருந்து, எவ்வாறு பெற்றுக் கொள்வது என்கிற கேள்வி, அரச நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

பாதீட்டுத் திட்டத்தில் அங்கிகரிக்கப்படாமல், நிதி ஒதுக்கீடுகளைத் திறைசேரி எப்படி அனுமதிக்கும்? அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை யார் வழங்குவது என்று, அதைச் சாதாரணமாக இவ்வாறு கேட்கலாம். மைத்திரி நாட்டை, எந்த இடத்தில் நிறுத்தியிருக்கிறார் என்பதற்கு இதுவே போதுமானது.   ஆனாலும், மைத்திரியின் தற்போதைய நடவடிக்கைகளால் காப்பாற்றப்பட்ட தரப்புகளும் இருக்கவே செய்கின்றன. அவை குறித்துத்தான் இந்தப் பத்தி பேச விளைகிறது.

ராஜபக்‌ஷக்களுக்கு எதிராக, நல்லாட்சிக் கூட்டணி உருவான போது, நாட்டு மக்கள் பாரிய எதிர்பார்ப்பை வெளியிட்டார்கள். ஊழல் மோசடிகளுக்கு எதிரான நிலையொன்றின் வழி, துரித அபிவிருத்தி பற்றிய நம்பிக்கை அது. ஆனால், அது 100 நாள் வேலைத்திட்டத்தின் போதே, தடுமாற்றத்தைக் காண்பித்தது.

ஆனாலும், பொதுத் தேர்தலின் பின்னராக தேசிய அரசாங்கத்தை அமைத்து, விடயங்களை முன்னேற்றகரமாக மேற்கொள்ள முடியும் என்று, நல்லாட்சிக் கூட்டணிக்குள் இருந்த தரப்புகள் பலவும் நம்பின.

குறிப்பாக, நல்லாட்சிக் கூட்டணிக்குள் பங்காளிகளாக இருந்த தமிழ்- முஸ்லிம் கட்சிகள். ஏனெனில், அந்த நம்பிக்கைகளை மக்களிடம் வழங்கியே, என்றைக்கும் பெற்றிராத அளவு வாக்குகளை, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி, ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பெற்றன.

ரவூப் ஹக்கீம், முஸ்லிம் காங்கிரஸின் வாங்கு வங்கியைச் சிதைத்துவிடாமல் காப்பாற்றி, ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று, தன்னை நிலைப்படுத்திக் கொண்டார்.

இன்னொரு பக்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூட, நல்லாட்சி அரசாங்கத்தினூடு தேசிய இனப்பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுவிடலாம் என்கிற நம்பிக்கையைப் பெருமளவு விதைத்து, வாக்கு அறுவடை செய்திருந்தது.

குறிப்பாக, அப்போதைய வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சிவில் சமூக அமைப்புகள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்டவற்றின் தடைகளைத் தாண்டி, பெருவாரியான வெற்றியைப் பெற்றது. அது கிட்டத்தட்ட ஏக அங்கிகாரம் என்கிற நிலையையும் எட்டியிருந்தது.

ஆனால், நல்லாட்சி அரசாங்கத்தால் கடந்த மூன்றரை ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்டிருப்பது ஒரு சில மாற்றங்களே. ஊழல் மோசடிக்கு எதிரான நிலைப்பாட்டில் நின்று, ஆட்சிப்பொறுப்பை ஏற்ற மைத்திரியாலும் ரணிலாலும் தங்களுடைய அமைச்சரவையை முறையாகப் பேண முடியவில்லை.

நாட்டின் பொருளாதாரம், நினைத்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்திருக்கவில்லை. “ராஜபக்‌ஷக்கள் ஏற்படுத்திவிட்டுப்போன பாதிப்புகளைச் சரி செய்வதற்கே, காலம் போதுமானதாக இல்லை” என்று, ரணில் குறைபட்டுக் கொண்டார்.

அத்தோடு, ரணிலின் கூட்டாளிகளின் நடவடிக்கைகளால், அரசாங்கத்தின் மீதான அழுத்தங்களும் அதிகரிக்கவே செய்தன. ராஜபக்‌ஷக்களின் காலத்தில் அதிகரித்திருந்த குடும்ப ஆதிக்கத்தின் அளவுக்கு இல்லையென்றாலும், அதன் குறைந்த வடிவமொன்று, நல்லாட்சி அரசாங்க காலத்திலும் நீடித்தது.

மைத்திரியின் குடும்ப ஆதிக்கம், அரச நிறுவனங்களில் தலை காட்டியது.
அத்தோடு, ஐக்கிய தேசியக் கட்சி- சுதந்திரக் கட்சி அமைச்சர்களுக்கு இடையிலான மோதல் நிலை என்பது, அமைச்சரவையை ஒட்டுமொத்தமாக ஸ்தம்பிக்கச் செய்தது. திட்டங்கள் வரையப்படுவதோடு நின்று போயின.

அவற்றைச் செயற்படுத்துவது சார்ந்த விடயங்களில், நேரம் வீணடிக்கப்பட்டது. சின்னச் சின்ன எதிர்ப்புகளையெல்லாம் பாரிய எதிர்ப்புகளாக எதிர்கொள்ள ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்துக்கு மேல், தைரியமான ஓர் ஆட்சி நிலையொன்றைப் பேணுவதில் தவறினார்கள். இவ்வாறான, சூழலால் ஆட்சியில் அங்கம் வகித்த தமிழ், முஸ்லிம் கட்சிகளாலும் மக்களிடம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சூழல் உருவானது.

கடந்த பல தசாப்தங்களுக்குப் பின்னர், தொண்டமான்களிடம் இருந்த மலையக மக்களின் பெரும்பான்மை வாக்குகளை, இன்னொரு தரப்புப் பெற்றிருப்பது இதுவே முதல் முறை. பழனி திகாம்பரமும், வேலுச்சாமி இராதாகிருஷ்ணனும் பெருவாரியாக மேல்நோக்கி வந்தார்கள்.

அவர்களை ஒருங்கிணைத்த தலைவராக, மனோ அங்கிகாரம் பெற்றார். அது அவருக்கு, ஆட்சிக்குள் ஹக்கீமும், ரிஷாட்டும் பெற்ற முக்கியத்துவத்துக்கு ஈடான அந்தஸ்தைப் பெற்றுத்தந்தது. எனினும், எதிர்பார்த்த அளவுக்கு, மலையகக் கிராமங்களின் அபிவிருத்தியிலோ, அவர்களின் சம்பளப் பிரச்சினையிலோ பாரிய வெற்றியைப் பெற முடியவில்லை.

அதற்கு, அரசாங்கமும் அவ்வளவுக்கு ஒத்துழைக்கவில்லை. இந்தநிலை, மலையக அமைச்சர்கள் மீது பெரும் அதிருப்தியைத் தோற்றுவித்தது. தெற்காசியத் தேர்தல்களில் வாக்களிப்பு என்பது, இருப்பதில் எது சிறந்தது என்கிற நிலையிலேயே இடம்பெற்று வருகின்றது.

அதன் போக்கில்தான், ராஜபக்‌ஷக்களுக்கு எதிராக மைத்திரி வந்ததும், தொண்டமான்களுக்கு எதிராக திகாம்பரமும் இராதாகிருஷ்ணனும் நிலைபெற்றமையுமாகும். ஆனால், மக்களின் எதிர்பார்ப்புகள் வீணடிக்கப்படும் போது, அவை அதிருப்திகளாக மாறும். அதிருப்தியாளர்களை மீட்பது, பெரும் சிக்கலாகும்.

மனோவின் பிரச்சினை இன்னும் கொஞ்சம் சிக்கலானது. ஏனெனில், மனோ பொறுப்பேற்ற தேசிய கலந்துரையாடல் அமைச்சை வைத்துக் கொண்டு, மக்களுக்கு நேரடியான உதவிகளைச் செய்ய முடியாது. அது, நிர்வாக ரீதியாகப் பழுதுபட்ட இடங்களை, (குறிப்பாக மொழிக்கொள்கை,  நல்லிணக்க முனைப்புகள்) சரி செய்யும் அமைச்சாகும்.

“தொடர்ச்சியாக மனோவுக்கு வாக்களித்து வருகின்றோம். ஆனால், அவர் அமைச்சராக பதவி வகிக்கும் தருணத்திலும் கூட, எங்களுக்கான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவில்லை என்கிற வருத்தம், கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கு உண்டு.

இன்னொரு பக்கம், அவர் அரசியல் ரீதியாகக் கூட்டமைப்போடு, குறிப்பாக சம்பந்தனோடும் சுமந்திரனோடும் அண்மைய காலங்களில் முரண்பட்டுக் கொண்டமை, தமிழ் மக்கள் மத்தியில் கலவையான உணர்வைத் தோற்றுவித்தது.

ஏற்கெனவே கொழும்பிலுள்ள வடக்கு- கிழக்கு தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதம் என்பது குறைவு. அவ்வாறான நிலையில், மனோவின் நடவடிக்கைகள் மீதான விமர்சனம், வாக்களிப்பு வீதத்தைக் குறைக்கும் அளவுக்கே சென்றது.

கூட்டமைப்பைப் பொறுத்தளவில், கடந்த மூன்றரை ஆண்டுகள் பெரும் அதிருப்தியைச் சந்தித்த ஆண்டுகளாகவே அமைந்தன. அரசியல் தீர்வு விடயத்தை முன்னிறுத்திவிட்டு, மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்த விடயங்களில் அக்கறையின்றி இருந்தமை, கிராம மட்டங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

தீர்வு குறித்த உரையாடல்களில் காணப்பட்ட தளம்பலும், கால நீடிப்பும் எதிர்த்தரப்புகளை நோக்கிய அதிருப்தியாளர்களை ஒன்றிணைத்தது.

நல்லாட்சி அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தமிழ், முஸ்லிம் கட்சிகளும் பின்னடைவையே சந்தித்து நின்றன. இவ்வாறான நிலையில், மஹிந்தவைப் பிரதமராக்கிவிட்டு, மைத்திரி, ஆடிக்கொண்டிருக்கும் ஆட்டத்தின் மூலம், தமிழ், முஸ்லிம் மக்கள், மீண்டும் அதிருப்தியின் அளவைக் குறைத்துக் கொண்டு, தங்களின் கூடுகளுக்குத் திரும்புவது சார்ந்து, சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

மைத்திரியின் கோமாளித்தனமாக ஆட்டத்தை, தமிழ்- முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் உறுப்பினர்களும் எதிர்கொண்ட விதம், மக்களுக்கு நம்பிக்கை ஊட்டியிருக்கின்றது. இது, அவர்களுக்கு எதிராக எழுந்த விமர்சனங்களைக் காணாமலாக்கவும் செய்திருக்கின்றது.

இன்றைய திகதியில், தேர்தலொன்று வருமாக இருந்தால், கூட்டமைப்பு சந்திக்கவிருந்த பாரிய நெருக்கடியிலிருந்து தப்பித்து, தன்னுடைய நிலையை மீண்டும் நிலைநிறுத்திக் கொள்ளும் வாய்ப்பு உருவாகி இருக்கின்றது.

மலையக மக்களின் வாக்குகளைத் திகாம்பரமும் இராதாகிருஷ்ணனும் பெரும்பான்மையாகப் பெறுவார்கள். கொழும்பில் தோல்வியின் விளிம்பிலிருந்த மனோ, தப்பித்துக் கொள்வார். ஹக்கீமும் ரிஷாட்டும், பழைய நிலையில் தொடர்வார்கள்.

புருஜோத்தமன் தங்கமயில் 

Leave a comment