மாலத்தீவு அதிபர் பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு

200 0

மாலத்தீவு அதிபராக இப்ராகிம் முகமது சோலிஹ் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். இந்த விழாவில் பிரதமர் மோடியும் பங்கேற்றார்.

இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவிற்கு அருகே அமைந்துள்ள குட்டித்தீவு நாடு மாலத்தீவு. இங்கு கடந்த செப்டம்பர் மாதம் 23-ந் தேதி நடந்த அதிபர் தேர்தலில் அப்போதைய அதிபர் அப்துல்லா யாமீனை, மாலத்தீவு ஜனநாயக கட்சியின் வேட்பாளர் இப்ராகிம் முகமது சோலிஹ் தோற்கடித்தார்.

சீனாவின் ஆதரவு பெற்ற அப்துல்லா யாமீன், பிரபல எதிர்க்கட்சி தலைவர்களை சிறையில் அடைத்து அவர்களை தேர்தலில் போட்டியிட முடியாமல் தடுத்தார். மேலும் அவரை எதிர்க்க முடியாமல் பல தலைவர்கள் நாட்டிலிருந்து தலைமறைவாகி விட்டனர்.

எனினும், இரண்டாம் நிலை தலைவரான 54 வயது இப்ராகிம் முகமது, அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் யாமீனை தோற்கடித்து உலக நாடுகளை ஆச்சரியப்படுத்தினார். அவர் மாலத்தீவு அதிபராக பதவி ஏற்கும் நிகழ்ச்சி மாலி நகரில் நேற்று நடந்தது.

இதில் கலந்துகொள்வதற்காக இப்ராகிம் முகமது ஏற்கனவே பிரதமர் மோடிக்கு அழைப்பும் விடுத்து இருந்தார். அதை ஏற்றுக்கொண்ட மோடி நேற்று மாலத்தீவு சென்றார். பிரதமராக பதவி ஏற்ற பிறகு மோடி அந்நாட்டுக்கு செல்வது இதுவே முதல்முறை ஆகும்.

மோடிக்கு தலைநகர் மாலியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை விமான நிலையத்தில் மாலத்தீவு நாடாளுமன்ற சபாநாயகர் அப்துல்லா மசிஹ் முகமது வரவேற்று அழைத்துச் சென்றார்.

மாலியில் உள்ள தேசிய கால்பந்து மைதானத்தில் பதவி ஏற்பு விழா நடந்தது. அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மாலத்தீவின் 7-வது அதிபராக இப்ராகிம் முகமது பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது 21 குண்டுகள் முழங்க அவருக்கு ராணுவ மரியாதையும் அளிக்கப்பட்டது.

விழாவில் மோடியை கவுரவிக்கும் விதமாக மாலத்தீவு முன்னாள் அதிபர்கள் முகமது நசீத், மமூன் அப்துல் கயூம் ஆகியோருக்கு அருகில் அவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவும் பங்கேற்றார்.

மாலத்தீவுக்கு பயணமாகும் முன்பு மோடி அடுத்தடுத்து வெளியிட்ட தனது டுவிட்டர் பதிவில், “புதிய அதிபருக்கு வாழ்த்துகள். மாலத்தீவின் வளர்ச்சிக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும். குறிப்பாக உள்கட்டமைப்பு, சுகாதாரம், தொலைத்தொடர்பு, மனித வள மேம்பாடு ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கும். மாலத்தீவில் நடந்த தேர்தல் மக்களின் ஜனநாயக உணர்வையும், நாட்டில் சட்டத்தின் ஆட்சிதான் நடைபெறவேண்டும் என்பதையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது” என்று குறிப்பிட்டு இருந்தார்.

Leave a comment