உறவுகளை நினைவு கூருவதற்காக துயிலுமில்லங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும்-ரவிகரன்

274 0

மக்கள் தங்கள் உறவுகளை விளக்கேற்றி நினைவு கூர்வதற்கான சந்தர்ப்பத்தை முழுமையாக ஏற்படுத்தக்கூடிய வகையில் மாவீரர் துயிலுமில்லங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா – ரவிகரன்  தெரிவித்துள்ளார்.

மாவீரர் தினத்தை முன்னிட்டு தாயகப் பிரதேசமெங்கும் காணப்படும் துயிலுமில்லங்கள் துப்பரவு செய்யப்பட்டுவருகின்றன.

அந்த வகையில் முல்லைத்தீவு – அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் 2018.10.27ஆம் நாளன்று நடைபெற்ற துப்பரவுப் பணிகளின் தொடர்ச்சியாக  இன்றைய நாள் துப்பரவுப் பணிகள் இடம்பெற்றன.

இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

அளம்பில் துயிலுமில்லத் துப்பரவுப் பணிகள் ஏற்கனவே ஒருதடவை நடைபெற்ற நிலையில்  இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

மாவீரர் நாளை செய்வதற்காக மக்கள் பலர் ஒன்றுகூடி இந்த சிரமதான பணிகளைச் செய்துகொண்டிருக்கின்றார்கள்.

இதில் முக்கியமாகச் சொல்லக்கூடிய ஒரு விடயம், இந்த அளம்பில் துயிலுமில்லம் இருக்கின்ற இடம் அடைக்கப்பட்டு, காவலரண்களும் அமைக்கப்பட்டு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.

மேலும் மாவீரர்கள் என்று போற்றப்படுபவர்கள் எங்களுடைய மக்களுடைய பிள்ளைகள். எங்களுடைய மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைத்திருக்குமாகவிருந்தால் நிச்சயமாக இந்த போராட்டமே நடைபெற்றிருக்காது.

நியாயமான ஒரு தீர்வு கிடைக்காத நிலையை முன்னைய ஆட்சியாளர்கள் தொடர்சியாக ஏற்படுத்திவந்ததனாலேயே, போராடவேண்டிய நிலைக்கு இளைஞர்கள் தள்ளப்பட்டார்கள்.

அத்துடன் அந்தப் பிள்ளைகளை விதைத்த இடத்தில் அவர்களுடைய உறவுகள் வந்து நினைவுகூர்வதற்கு சந்தர்ப்பமில்லாத காலமும் இருந்து. இப்போது படிப்படியாக நினைவுகூர்வதற்கு சந்தர்ப்பங்கள் கிடைத்தாலும் அளம்பில் துயிலுமில்லம் விடுவிக்கப்படவில்லை. துயிலுமில்லத்திற்குள் இருக்கின்ற இராணுவத்தினர் வெளியேறவேண்டும்.

பகுதி பகுதியாகவெனினும் எமது மக்கள் மாவீரர் நாளைச் செய்வார்கள். குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்தவரை தேராவில், இரணைப்பாலை, முள்ளியவளை, அளம்பில், முல்லைத்தீவு நகர்ப்பகுதி, வன்னிவிளாங்குளம் உள்ளிட்ட பல இடங்களில் மாவீரர் நாள் செய்யப்பட்டுவருகின்றன.

இருப்பினும் சில இடங்கள் மூடி மறைக்கப்பட்டு, அல்லது மக்கள் நினைவுகூரச் செல்வதைத் தடுத்து இராணுவத்தினர் அழுத்தங்களை வழங்குகின்றனர். குறிப்பாக ஆலங்குளம் பகுதி இன்றுவரை விடுவிக்கப்படவில்லை.

எனவே மாவீரர் துயிலுமில்லங்கள் முழுமையாக விடுவிக்கப்பட்டு மக்கள் தமது உறவுகளை நினைவுகூர முழுமையான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும் என்பதே மக்களதும், எமது கருத்தாகவும் உள்ளது என்றார்.

Leave a comment