நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தீர்மானம் மிக்கதோர் தீர்ப்பானது 5 மணிக்கு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றில் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த மாதம் திடீரென பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கி விட்டு புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார்.

இச் சம்பவத்தின் காரணமாக நாட்டில் யார் பிரதமர்? என்ற குழப்ப நிலை நிலவி வருகிறது.

இதனிடையே ஜனாதிபதி கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றை கலைத்து பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் இத்தகைய தான்தோன்றித்தனமான செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து 15 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டும் ஆதரவாக 5 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டும் இரண்டாவது நாளாகவும் விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டுள்ளன.

குறித்த தீர்மானம் மிக்கதோர் வழக்கு விசாரணை பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையில் பிரியந்த ஜயவர்தன மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் நடைபெற்று வந்த நிலையில் மாலை 5 மணி வரை குறித்த அமர்வு சற்று முன்னர் ஒத்திவைக்கப்பட்டது