முனைவர்கள் அருகோ, தாயம்மாள் அறவாணனுக்கு ரூ.5 லட்சம் இலக்கியப் பரிசு

303 0

201609260734081882_literary-prize-of-rs-5-lakh-dinathanthi-provides-tomorrow_secvpf‘தினத்தந்தி’ சார்பாக நாளை நடைபெறும் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழாவில் மூத்த தமிழறிஞர் விருதை முனைவர் அருகோவும், சிறந்த நூலுக்கான பரிசை முனைவர் தாயம்மாள் அறவாணனும் பெறுகிறார்கள்.

‘தினத்தந்தி’ நிறுவனர் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் நினைவாக ஆண்டுதோறும் அவருடைய பிறந்தநாளையொட்டி இலக்கியப் பரிசு வழங்கப்படுகிறது.மூத்த தமிழறிஞருக்கு ரூ.3 லட்சமும், சிறந்த இலக்கிய நூலுக்கு ரூ.2 லட்சமும் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் ‘சி.பா.ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது’ பெற்றார். அவருக்கு ரூ.3 லட்சத்துக்கான காசோலையும், விருதும் வழங்கப்பட்டது. ‘சி.பா.ஆதித்தனாரின் இலக்கியப் பரிசு’ திரைப்பட டைரக்டரும், எழுத்தாளருமான தங்கர்பச்சானுக்கு வழங்கப்பட்டது. அவருக்கு ரூ.2 லட்சத்துக்கான காசோலையும், விருதும் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு இலக்கியப் பரிசு பெறுவோர் விவரங்களை ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் அறிவித்து உள்ளார்.‘சி.பா.ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது’, முனைவர் அருகோவுக்கு வழங்கப்படுகிறது. அவருக்கு வெள்ளிப்பட்டயத்துடன் ரூ.3 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.

மூத்த தமிழறிஞர் விருது பெறும் முனைவர் அருகோ (அரு.கோபாலன்) எழுத்திலும் பேச்சிலும் வல்லவர். இவர் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் 21.11.1937-ல் பிறந்தார். தந்தை பெயர் அருணாசலம், தாயார் பெயர் கோமதி அம்மாள். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தார்.

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 1958-ல் ‘நாம் தமிழர்’ இயக்கத்தைத் தொடங்கிய போது அதில் இணைந்தார். அரு.கோபாலனின் பேச்சாற்றலை கண்டு வியந்த ஆதித்தனார், அவருக்கு, தமிழ்நாட்டின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவர் என்று புகழாரம் சூட்டினார். அரு.கோபாலன் என்ற பெயரை ‘அருகோ’ என்று சுருக்கி அப்பெயரை பிரபலமாக்கினார்.

‘நாம் தமிழர்’ இயக்கத்தின் அதிகாரபூர்வமான வார இதழான ‘தமிழ்க்கொடி’யின் ஆசிரியராக அருகோவை ஆதித்தனார் அமர்த்தினார். ஆதித்தனார் நடத்திய ஒவ்வொரு போராட்டத்திலும் கலந்து கொண்டு சிறை சென்றவர் அருகோ.

இலங்கை தமிழர்கள் நடத்திய போராட்டங்களில் அவர்களுக்கு துணை நின்றார். இலங்கை தமிழர்களுக்கு தமிழ் ஈழம் வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்தி, 1984-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் சர்வதேச ரீதியில் பன்னாட்டு தமிழ் நடுவத்தின் தலைவர் டாக்டர் வின்ஸ்டன் பஞ்சாட்சரம் மாநாடு நடத்தினார். இதில் பழ.நெடுமாறன், ‘பெருங்கவிக்கோ’ வா.மு.சேதுராமன், தங்கபாலு, மதுரை ஆதீனம் உள்ளிட்ட தலைவர்களுடன் கலந்து கொண்டு, சுதந்திர ஈழம் அமைக்கப்பட வேண்டும் என்று முழக்கமிட்டவர், அருகோ.

அருகோ சிறந்த எழுத்தாளரும் ஆவார். அவர் ‘ஈழம், தமிழினம், இந்தியா’ (கட்டுரைகள்), ‘நீரில் பூத்த நெருப்பு மலர்கள்’ (கவிதைத் தொகுதி), ‘தமிழகத்தை விட சிறிய தனித்து வாழும் நாடுகள்’ (கட்டுரை), ‘கண் அவன்’ (சிறுகதைத் தொகுதி), ‘முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கம்: உடன்பாடும் உண்மைப்பாடும்’ போன்றவை உள்பட 10-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி உள்ளார். ‘எழு கதிர்’ என்ற மாத இதழை 34 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வருகிறார்.

இவரது மனைவி பெயர் கல்யாணி. ஒரே மகன் தமிழ்ச்செல்வன்.இந்த ஆண்டுக்கான சி.பா.ஆதித்தனார் இலக்கியப்பரிசை முனைவர் தாயம்மாள் அறவாணன் பெறுகிறார். இவருடைய ‘அவ்வையார் படைப்புக்களஞ்சியம்’ என்ற நூலுக்கு தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கியப்பரிசு (ரூ.2 லட்சம்) வழங்கப்படுகிறது.

முனைவர் தாயம்மாள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணனின் மனைவி. வயது 73.எம்.ஏ. (தமிழ்) மற்றும் ‘பி.எச்டி’ படித்துவிட்டு பச்சையப்பன் மகளிர் கல்லூரி துணைப் பேராசிரியராகவும், பின்னர் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத் தமிழியல் துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

தமிழக அரசின் ‘கி.ஆ.பெ.விசுவநாதம் விருது’, ‘வாரியார் விருது’, ‘அவ்வை விருது’, ‘தமிழறிஞர் இலக்குவனார் சாதனை விருது’ முதலிய விருதுகளை பெற்று உள்ளார்.இவர் 25 நூல்கள் எழுதி உள்ளார். ‘திராவிட ஆப்பிரிக்க ஒப்பீடு’ என்ற நூலுக்கு தமிழக அரசின் முதல் பரிசு கிடைத்தது. ‘தமிழ்ச் சமூகவியல் ஒரு கருத்தாடல்’ என்ற நூலுக்கு, இந்திய பல்கலைக்கழக தமிழாசிரியர் மன்றப் பரிசை பெற்றார்.

அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில் பல நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து உள்ளார். மேற்கு ஆப்பிரிக்காவின் செனகால் நாட்டு பல்கலைக்கழக இலக்கிய துறையில் 1979-82-ல் பணியாற்றி உள்ளார்.

நாளை (செவ்வாய்க் கிழமை) மாலை 6 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள ராணி சீதை மன்றத்தில் சி.பா.ஆதித்தனாரின் 112-வது பிறந்த நாள் விழா, இலக்கியப் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் முனைவர் ஜி.பாஸ்கரன் விழாவுக்கு தலைமை தாங்கி விருது மற்றும் இலக்கியப் பரிசுகளை வழங்குகிறார்.