சந்திரபாபு நாயுடு இன்று மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார்

270 0

ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று மாலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசுகிறார்.

பா.ஜ.க.வுக்கு எதிராக கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசுகிறார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அங்கம் வகித்தது. ஆனால், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தரவில்லை என்று கூறி பா.ஜ.க. கூட்டணியை விட்டு தெலுங்கு தேசம் கட்சி வெளியே வந்தது.

தற்போது, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார்.

ஏற்கனவே, அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறார்.

கடந்த வாரம் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசி கூட்டணியை உறுதி செய்தார். நேற்று மாலை மதசார்பற்ற ஜனதாதள தலைவர் தேவேகவுடாவை அவர் சந்தித்து பேசினார்.

இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுவதற்காக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை வருகிறார். அவரது வருகையையொட்டி, 3 நாள் பயணமாக பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் மு.க.ஸ்டாலின் உடனே சென்னை திரும்புகிறார்.

இன்று மாலை 6.30 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலினின் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக, விஜயவாடாவில் இருந்து தனி விமானத்தில் மாலை 5 மணிக்கு சந்திரபாபு நாயுடு புறப்படுகிறார். மாலை 6 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும் அவர், அங்கிருந்து கார் மூலம் ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு வருகிறார்.

மாலை 6.30 மணியில் இருந்து இரவு 8.15 மணி வரை சந்திரபாபு நாயுடு அங்குதான் இருக்கிறார். இந்த சந்திப்பின்போது, தனது குடும்ப உறுப்பினர்களை மு.க.ஸ்டாலின், சந்திரபாபு நாயுடுவுக்கு அறிமுகம் செய்துவைக்கிறார். மேலும், விருந்து கொடுத்து உபசரிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பின்போது, பா.ஜ.க.வுக்கு எதிராக கைகோர்த்து செயல்படுவது குறித்து மு.க.ஸ்டாலின் – சந்திரபாபு நாயுடு ஆகியோர் முடிவு எடுத்து அறிவிக்க இருக்கின்றனர். அதன்பிறகு, இரவு 8.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும் சந்திரபாபு நாயுடு, அங்கிருந்து ஐதராபாத் புறப்பட்டு செல்கிறார்.

Leave a comment