பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் மத்திய வங்கி ஊழல் மோசடியுடன் தொடர்புபட்ட எவரையும் எம்முடன் இணைத்துக்கொள்ளப்போவதில்லை. அத்துடன் ரணில் விக்கிரமசிங்கவும் இதுதொடர்பாக வாக்குமூலம் அளிக்கவேண்டிவரும் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
சோஷலிச மக்கள் முன்னணி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
மத்திய வங்கியின் பிணைமுறி விசாரணைகள் இனிமேல் முறையாக இடம்பெறும். விசாரணைகளுக்கு தலையீடு செய்ய தற்போது யாரும் இல்லை. மத்திய வங்கி பிணைமுறி மோசடிக்கு ரணில் விக்கிரமசிங்கவும் ஒரு தரப்பைச் சேர்ந்தவர். அவருக்கு எதிராக நாங்கள் முறைப்பாடு செய்திருக்கின்றோம். அவர் பிரதமராக இருக்கும்வரை அந்த விசாரணை முறையாக இடம்பெறாது என்பதும் எங்களுக்கு தெரியும்.
அதனால் ரணில் விக்கிரமசிங்க தற்போது பிரதமர் பதவியில் இல்லாமையால் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படாது. அத்துடன் விசாரணை முறையாக இடம்பெறுவதால் ரணில் விக்கிரமசிங்கவும் அதுதொடர்பாக வாக்குமூலம் அளிக்க அழைக்கப்படலாம். அத்துடன் எமது அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க முன்வருமாறு ஐக்கிய தேசிய கட்சிக்கும் நாங்கள் அழைப்பு விடுத்திருக்கின்றோம்.
என்றாலும் ஐக்கிய தேசிய கட்சியில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரானவர்களையும் மத்திய வங்கி ஊழல் மோசடியுடன் தொடர்புபடாதவர்களையுமே நாங்கள் இணைத்துக்கொள்வோம். பாராளுமன்றத்தில் எமக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. அவ்வாறு பெரும்பான்மை கிடைக்காது போனாலும் மத்திய வங்கி ஊழல் மோசடியுடன் தொடர்புபட்ட எவரையும் நாங்கள் இணைத்துக்கொள்ளப்போவதில்லை.
எமக்கு பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவையும் நாங்கள் கோரியுள்ளோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட்டமைப்பின் தலைவருடன் இதுதொடர்பாக கலந்துரையாடியுள்ளார். அவர்களின் கோரிக்கைகளில் எங்களால் நிறைவேற்ற முடியுமான விடயங்களை செய்து கொடுக்க தயாராக இருக்கின்றோம்.
தற்போது கட்சி மாறும் உறுப்பினர்கள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் தெரிவிக்கப்படுகின்றன. கட்சி மாறுதல் என்பது சாதாரண விடயமாகும். அத்துடன் அதற்காக யாருக்காவது சன்மானங்கள் வழங்கப்படுமாக இருந்தால் அதனை இலஞ்ச மாக கருதமுடியாது.அப்படியானால் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுவதும் இலஞ்மாகவே கருதப்படவேண்டும் என்றார்.

