புதிய பிரதமருக்கு ஆதரவு அளிக்க முடியாது – சித்தார்த்தன்

319 0

புதிய பிரதமருக்கு ஆதரவு அளிக்க முடியாத நிலைப்பாட்டை நாங்கள் எடுத்துள்ளோம் என புளொட் அமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் தமிழீழ விடுதலை கழகத்தின் மத்தியகுழு கூட்டமும், வன்னி பிராந்திய புளொட் அமைப்பின் கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் கூட்டமும் நேற்று புளொட் அமைப்பின் தலைவரும், யாழ் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தலைமையில் கோவில்குளம் சந்தியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையில் வன்னி பிராந்திய புளொட் அமைப்பின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் சந்தித்த தமிழீழ விடுதலை கழகத்தின் தலைவர் த.சித்தார்த்தன் கழகத்தின் உறுப்பினர்களுக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலைகள் தொடர்பாக விளக்கமளித்ததுடன் உறுப்பினர்களின் கேள்விக்கும் பதிலளித்திருந்தார்.

அதன் பின் நடைபெற்ற தமிழீழ விடுதலை கழகத்தின் மத்திய குழு கூட்டத்தின் பின் ஊடகவியலாளர்களுக்கு அவர் மேலும் கருத்து தெரிவித்த த.சித்தார்த்தன்,

நாட்டில் பிரதமரை மாற்றி நியமித்தமை அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சைகளையும் குழப்பங்களையும் உருவாக்கியுள்ளது. அரசியல் அமைப்புக்கு விரோதமான ஒரு செயல்பாடாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு அதைப் பார்க்கின்றது. ஆகவே புதிய பிரதமருக்கு ஆதரவு அளிக்க முடியாத நிலைப்பாட்டை நாங்கள் எடுத்துள்ளோம்.

புளொட் அமைப்பிலிருந்து கட்சி மாறிய கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்  அவர்களை எமது கட்சி விலக்கியுள்ளதுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்தும் விலக்குமாறும் பரிந்துரை செய்துள்ளது என தெரிவித்தார்.

Leave a comment