கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

281 0

201609251131158705_petrol-bombing-in-kannagi-nagar-police-station_secvpfகண்ணகி நர்க போலீஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயர் போலீஸ் அதிகாரிகள் போலீஸ் நிலையத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் கார்த்திக்(வயது21). இவரை துரைப்பாக்கத்தில் பெண் என்ஜீனியரை தாக்கி நகை பறித்த வழக்கில் கடந்த 22-ந்தேதி இரவு கண்ணகி நகர் போலீசார் கைது செய்தனர்.

போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய போது திடீரென கார்த்திக் இறந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.கார்த்திக்கின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டங்களில் ஈடுபட்டனர். விசாரணை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

பெண் என்ஜினீயரிடம் நகை பறித்த வழக்கில் கண்ணகி நகரை சேர்ந்த மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கும் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் மர்ம கும்பல் கண்ணகி நகர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். திடீரென அவர்கள் போலீஸ் நிலைய வளாகத்தில் நிறத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர்.

இதில் குண்டுகள் வெடித்து சிதறியதில் மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்தன. சத்தம் கேட்டு போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த போலீஸ்காரர்கள் வெளியே வந்தனர். உடனே மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.இது குறித்து துரைப்பாக்கம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்களுடன், போலீசாரும் சேர்ந்து தீயை அணைத்தனர். 10 மோட்டார் சைக்கிள்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.

இதில் 5 மோட்டார் சைக்கிள்கள் போலீசாருக்கு சொந்தமானது என்று தெரிகிறது. மற்றவை குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டவை ஆகும்.பைக்குகள் தீப்பிடித்து எரிந்த போது 25-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அருகில் நிறுத்தப்பட்டு இருந்தன. உடனடியாக அவற்றை போலீசார் அப்புறப்படுத்தியதால் தப்பியது.

விசாரணைக் கைதி கார்த்திக் இறந்ததால் ஆந்திரம் அடைந்த மர்ம கும்பல் போலீஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.இது தொடர்பாக பழைய குற்றவாளிகள் பட்டியலை போலீசார் சேகரித்து உள்ளனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

போலீஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயர் போலீஸ் அதிகாரிகள் போலீஸ் நிலையத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.இதையடுத்து போலீஸ் நிலையம் முன்பு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.