இலங்கையில் ராஜபக்சே பிரதமராகி இருப்பது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்திய அரசுக்கே ஆபத்தானது. இதன் மூலம் இந்தியா – இலங்கை வெளியுறவுக் கொள்கையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது எனத் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “இலங்கையில் ராஜபக்சே பிரதமராகியிருப்பது இந்திய வெளியுறவுக் கொள்கை அணுகுமுறையில் ஏற்பட்டிருக்கும் பெரும் பின்னடைவாகும். ரணில் விக்ரமசிங்கே இந்திய நாட்டின் ஆதரவாளர் என்பதால் மைத்திரி பால சிறிசேனா அவரை நெருக்கடிக்கு ஆளாக்கி வெளியேற்றி விட்டு, அவரது அரசியல் எதிரி ராஜபக்சேவை பிரதமராக்கி இருக்கிறார். இதை இலங்கை அரசியலில் ஏற்பட்டிருக்கும் மாற்றமாக மட்டும் பார்க்க முடியாது. இந்திய அரசியலில் குறிப்பாக தமிழ் மக்களின் நலனில் இது பாதிப்பை ஏற்படுத்தும். இலங்கை மற்றும் இந்திய வெளி விவகார கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டத்தில் இந்திய அரசு இருக்கிறது.

