துருக்கியில் பத்திரிகையாளர் கசோக்கி படுகொலை சம்பந்தமான வழக்கு, சவுதியில்தான் விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் கடந்த 2-ந் தேதி மாயமானதாக கூறப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி, அங்கு வைத்து படுகொலை செய்யப்பட்டது அம்பலத்துக்கு வந்துள்ளது.
இதை முதலில் மறுத்த சவுதி அரேபியா பின்னர் ஒப்புக்கொண்டது.கசோக்கி கொலையாளிகள் என சந்தேகிக்கப்படுகிற 18 பேர் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை வழக்கு விசாரணைக்காக தங்கள் நாட்டுக்கு நாடு கடத்த வேண்டும் என்று துருக்கி அதிபர் எர்டோகன் கேட்டுக்கொண்டார்.
ஆனால் அந்த வேண்டுகோளை சவுதி அரேபியா நிராகரித்து விட்டது.
இதுபற்றி அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி அதெல் அல் ஜூபைர் பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் கூறும்போது, “கசோக்கி படுகொலையில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் சவுதியை சேர்ந்தவர்கள். அவர்கள் சவுதியில்தான் கைது செய்யப்பட்டனர். எனவே அவர்கள் மீதான வழக்கு விசாரணை சவுதியில்தான் நடைபெறும்” என்று குறிப்பிட்டார்.
இதற்கிடையே கசோக்கி மறுமணம் செய்யவிருந்த ஹேடிஸ் செங்கிஸ் என்ற பெண்ணை வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசுவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அழைப்பு விடுத்தார். ஆனால் அந்த அழைப்பை அந்தப் பெண் நிராகரித்து விட்டார். கசோக்கி படுகொலை விசாரணையில் அமெரிக்கா உண்மையான ஈடுபாடு காட்டவில்லை என்று அவர் புகார் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

